பதிவு செய்த நாள்
20
அக்
2018
12:10
பம்பை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பு தொடர்பாக நடக்கும் போராட்டங்களால் ஐப்பசி மாத பூஜைக்கு பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் காலடியை சேர்ந்த பிரவீன் கூறியதாவது: நான் 12 ஆண்டுகளாக சபரிமலை வருகிறேன். இந்தாண்டு எட்டு வயது மகள் சரளா, 68 வயது தாயார் மேதா முதல் முறையாக சபரிமலை வந்துள்ளனர். தரிசனம் முடிந்து அவர்களை அழைத்து கொண்டு பம்பை வந்துள்ளேன்.
சபரிமலைக்கு குறிப்பிட்ட வயதுள்ள பெண்களுக்கு அனுமதியில்லை, என்பது புராதான வழிபாட்டு முறை. அதை தவறாக பயன்படுத்துவது தவறு. எனவே, உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மறு சீராய்வு மனுவை உடனே தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை சபரிமலையில் குறிப்பிட்ட வயது பெண்களை அனுமதிக்கக்கூடாது. இதை மீறினால் தெய்வ குற்றமாகி மீண்டும் இயற்கை சீற்றம் ஏற்பட்டு கேரளாவே அழிந்து விடும் அபாயம் இருப்பதாக ஐயப்பனை நம்பும் பக்தர்கள் கருதுகின்றனர், என்றார்.
ஐதீகம் மீறல் கூடாது:திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டை சேர்ந்த சின்னராஜ் கூறியதாவது: எனக்கு 80 வயது ஆகிறது. 40 ஆண்டுகளாக சபரிமலைக்கு வருகிறேன். 18 படிகள் புனிதமானவை. ஆசைகளை துறந்தவன் தான் 18 படிகளில் ஏற வேண்டும், என்பது ஐதீகம். எனவே, 18 படிகளை கடப்பது ஒரு குறிப்பிட்ட வயதுள்ள பெண்களுக்கு ஏற்புடையது அல்ல. இதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் உணர்ந்திருக்க வேண்டும். எனினும், கேரள கம்யூ., அரசு திட்டமிட்டே குழப்பம் ஏற்படுத்தி விட்டது. இனியும் காலம் தாழ்த்தாமல் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும், என்றார்.
பிக்னிக் இடமாக மாறும்:கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு திருவேங்கடம் கூறியதாவது: 27 ஆண்டுகளாக சபரிமலை வருறேன். அனைத்து பெண்களும் சபரிமலைக்கு வரலாம் என்றால் புனிதம் பாதிக்கப்படும். மீறுவோரை பந்தளம் மன்னர் குடும்பம், தந்திரிகள்,மேல்சாந்திகள் தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்க வேண்டும், என்றார்.