பதிவு செய்த நாள்
20
அக்
2018
12:10
சபரிமலை,: சபரிமலை வரை வந்த ரஹானா பாத்திமா, ஆந்திராவைச் சேர்ந்த கவிதா ஜெக்காலா, பூஜாரிகள் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பால் திரும்பினர். நடை அடைக்கப்படும் என்று தந்திரி கண்டரரு ராஜீவரரு அறிவித்தார். சபரிமலையில் பெயர் எடுப்பதற்காக வருபவர் களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது, சபரிமலையை போராட்டக்களமாக்க அனுமதிக்க முடியாது, என்று தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அமல்படுத்தும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டது. இதற்கு எதிராக கேரளா முழுவதும் நடந்த போராட்டம் சபரிமலை நடை திறப்பு நாளான அக்.17-ல் நிலக்கல் முதல் பம்பை வரை பரவியது. ஏராளமான போராட்டக்காரர்கள் ஆங்காங்கே குவிந்தனர். பல முறை தடியடி நடத்தியும் கட்டுப்படுத்த முடியாததால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் காட்டில் பதுங்கிய போராட்டக்காரர்கள், பெண்கள் வந்தால்அவர்களை தடுத்து திருப்பி அனுப்பினர்.நேற்று முன்தினம் (அக்.,18ல்) இரவு ஆந்திராவை சேர்ந்த டிவி நிருபர் கவிதா ஜெக்காலா, எர்ணாகுளத்தை சேர்ந்த ரஹானா பாத்திமா பம்பை வந்தனர். அவர்கள் சன்னிதானம் செல்ல பாதுகாப்பு கேட்டனர். போலீசார் இரவு செல்வது சிரமம். அடுத்த நாள் காலை செல்லலாம் என்று தெரிவித்தனர்.
நேற்று (அக்., 19ல்) அதிகாலை இருவரும் இருமுடி கட்டி புறப்பட்டனர். பாதுகாப்புக்காக 150 போலீசார் உடன் சென்றனர். கவிதாவுக்கு போலீஸ் ஹெல்மெட், பாதுகாப்பு கவச உடை. ரஹானா பாத்திமாவுக்கு ஹெல்மெட் அணிவிக்கப்பட்டது.
அவர்கள் காலை 9:15 மணிக்கு சன்னிதானம் முன் வந்த போது பெரும் கூட்டம் தடுத்தது. ஐ.ஜி., ஸ்ரீஜித் பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டக்காரர்கள் பணியவில்லை. மேல்சாந்தி, தந்திரியை தவிர மற்ற உதவி பூஜாரிகள் அனைவரும் வேலையை புறக்கணித்து 18 படி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பந்தளம் மன்னர் குடும்பத்தில் இருந்து தந்திரியை அழைத்து பெண்கள் படியேறினால் கோயில் நடை அடைக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
இதை தொடர்ந்து, பெண்கள் படியேறி வந்தால் கோயில் நடை அடைத்து, மேலாளரிடம் சாவியை கொடுத்து விட்டு செல்வேன், என தந்திரி கண்டரரு ராஜீவரரு அறிவித்தார்.
போராட்டம் நடத்தியவர்கள் முன்வரிசையில் குழந்தைகளை நிறுத்தியிருந்தனர். பலம் பிரயோகிக்க முடியாத நிலை போலீசுக்கு ஏற்பட்டது. இதனால் கவிதா திரும்பி செல்வதாக கூறினார்.
ஆனால் ரஹானா பாத்திமா படியேறி தரிசனம் நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஐ.ஜி., ஸ்ரீஜித் கெஞ்சுவதுபோல் நிலைமையை எடுத்துக்கூறியதால் ரஹானா பாத்திமாவும் திரும்பி செல்ல சம்மதம் தெரிவித்தார். பின்னர் பம்பை வரை பலத்த காவலுடன் அழைத்து செல்லப்பட்ட இரண்டு பெண்களும் போலீஸ் வேனில் ஊருக்கு அழைத்து செல்லப் பட்டனர்.முன்னதாக கவிதா கூறுகையில் ஒன்றும் தெரியாத குழந்தைகளை முன்நிறுத்தி போராடியதால், பிரச்னை வேண்டாம் என திரும்பி செல்கிறேன், என கூறினார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தது முதல் விரதம் இருந்து வந்தேன். வலுக்கட்டாயமாக திருப்பி அழைத்து செல்கின்றனர் என ரஹானா பாத்திமா கூறினார். பெண்கள் திரும்பிச்சென்றதைத் தொடர்ந்து சன்னிதானத்தில் நடந்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. சிலமணி நேரம் கழித்து பம்பைக்கு திருவனந்தபுரம் கழக்கூட்டத்தைச்சேர்ந்த மேரி ஸ்வீட்டி வந்தார்.
காலையில் நடந்த சம்பவத்தை கூறி பாதுகாப்பு வழங்க முடியாது என்று போலீசார் கூறிய தால் அவர் திரும்பி சென்றார்.இதுகுறித்து அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது: பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கலாம். ஆனால் பெயர் எடுப்பதற்காக வரும் போராட்ட ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது.
அப்படிப்பட்டவர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்கும் இடம் சபரிமலை அல்ல. சபரிமலையை போராட்டக்களமாக்க அனுமதிக்க முடியாது. அவர்களை சபரிமலைக்கு அழைத்துச்செல்லும் முன் போலீசார் சற்று கவனத்துடன் செயல்பட்டிருக்க வேண்டும். ஏராளமான அப்பீல் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் தீர்ப்பு மாறி வந்தால் அரசு அதை அமல்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார். பெயர் எடுப்பதற்காக வந்த போராட்ட ஆர்வலர்களை மலையில் ஏற்றிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கேரள மாநில பா.ஜ., தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை கூறினார். அப்பீல் மனு மீது ஒரு முடிவு வருவதற்குள் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு தேவசம்போர்டும், அரசும் முயற்சிக்கிறது, இப்படியே போனால் சட்டத்தை நாங்கள் கையில் எடுக்க வேண்டி வரும், என்று பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான கே.சுரேந்திரன் கூறியுள்ளார்.
போராட்ட ஆர்வலர்கள் பக்கம் அரசு உள்ளதாக, எதிர்கட்சியான காங்., தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறினார். இதற்கிடையில் எர்ணாகுளத்தில் ரஹானா பாத்திமா வீட்டை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியது. கழக்கூட்டம் மேரிஸ்வீட்டி வீட்டுக்கு காங்கிரஸ், பா.ஜ., தொண்டர்கள் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினர்.
நேற்று (அக்., 20ல்) மூன்று பெண்கள் வந்து திரும்பினர். ஆனால் இதுவரை வந்த பெண்கள் அனைவரும் உண்மையான பக்தர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. விளம்பர நோக்கில் வந்தவர்களாக தெரிகிறது. இதை வைத்து பார்க்கும் போது சபரிமலையை ஒரு விவாத பூமியாக்க சதி நடைபெறுகிறது என்று சபரிமலை வந்த பக்தர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.டி.ஜி.பி.,யை அழைத்தார் கவர்னர்சபரிமலையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை தொடர்பாக டி.ஜி.பி., லோக்நாத் பெஹ்ராவை, கவர்னர் சதாசிவம் அழைத்து விசாரித்தார். 30 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது. நிலக்கல், பம்பை, சன்னிதானத்தில் உள்ள சூழ்நிலை, போலீஸ் நடவடிக்கை குறித்து டி.ஜி.பி., விளக்கினார்.
சபரிமலையில் ஏற்பட்டுள்ள பதட்டத்தை தணிக்கவும், சட்டம் ஒழுங்கை காக்கவும் போலீஸ் கவனம் செலுத்த வேண்டும் என்று கவர்னர் கேட்டுக் கொண்டார்.