பதிவு செய்த நாள்
23
அக்
2018
12:10
வீரபாண்டி: ஒவ்வொரு பிரதோஷ தினத்திலும், புகழ்பெற்ற சிவாலயங்களில் தாண்டவ நடன மாடி, தொண்டு செய்து வரும் பரத கலைஞர், நேற்று (அக்., 22ல்) கரபுரநாதர் முன் நடன மாடினார்.
உடுமலைபேட்டையை சேர்ந்தவர் செந்தில், 50, என்பவர் கடந்த, 19 ஆண்டுகளாக ஒவ்வொரு பிரதோஷத்தன்றும், ஒரு சிவலாயத்தில் பிரதோஷ தாண்டவம் என்ற நவசந்தி நடனமாடி தொண்டு செய்து வருகிறார். சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் சோமவார பிரதோஷத்தையொட்டி நேற்று (அக்., 22ல்) மாலை, 5:00 மணிக்கு, 431வது முறையாக பிரதோஷ தாண்டவத்தை அரங்கேற்றினார். காளை வாகனத்தில், பெரியநாயகி சமேத கரபுரநாதரை, பக்தர்கள் தோளில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்த போது, அபிநயத் துடன் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து கொண்டே நடனமாடியபடி செந்தில் வந்தார். திங்கள்கிழமை வரும், சோமவார பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும், வளர் பிறையில் வந்த பிரதோஷத்தன்று வழிபட்டால், நினைத்தது எல்லாம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. நடனம் மற்றும் பிரதோஷ பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள், சிவாச்சாரியார்கள் மற்றும் நடன குழுவினர் செய்தனர்.