பதிவு செய்த நாள்
25
அக்
2018
12:10
ஈரோடு: உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும், பசிப்பிணியின்றி வாழ, அனைத்து சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேகம் நடந்தது.
ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு நட்சத்திரத்தில், ஒவ்வொரு பொருட்களை கொண்டு, சிவனுக்கு அபிஷேகம் நடக்கும். சித்திரையில் சித்ரா நட்சத்திரம், வைகாசியில் விசாக நட்சத்திரம், அது போல் ஐப்பசியில் வரும் அஸ்வதி நட்சத்திரத்தில் பவுர்ணமியும், சேர்ந்து வருவதால் அன்னம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. உலகில் உள்ள உயிரினங்கள் பசி, பிணியின்றி நலமாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில், உணவை படைத்த இறைவனுக்கே, உணவை படைக்கும் விதமாக நடக்கும் இந்த அன்னா பிஷேக அன்னத்தை, அனைத்து ஜீவராசிகளுக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக வனம், ஏரி, குளம், கடல், ஆறு என, அனைத்து இடங்களிலும் தூவப்படுகிறது. அதன்படி, நேற்று 24 ல், ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர், மகிமாலீஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர், பவானி சங்கமேஸ்வரர், உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடந்தது.
மகிமாலீஸ்வரர் கோவிலில் நடந்த அன்னாபிஷேக விழாவில், 150 கிலோ, ஆருத்ர கபாலீஸ் வரர் கோவிலில், 100 கிலோ அரிசியில் வடிக்கப்பட்ட அன்னத்தை கொண்டு, அன்னாபிஷேகம் நடந்தது.
காலை, ஜோதிலிங்க வழிபாடுடன் தொடங்கி, மாலையில் அன்னாபிஷேகம், தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. விழாவில், பக்தர்களுக்கு அபிஷேக அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான சிவனடியார்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* சென்னிமலை டவுன் கிழக்கு ராஜா வீதியில் உள்ள, ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் அன்னா பிஷேகம் நடந்தது. கைலாசநாதர் திருமேனி, 50 கிலோ அரிசி, 30 கிலோ காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதே போல் சென்னிமலை அடுத்துள்ள, முருங்கத்தொழுவு பிரமலிங்கேஸ்வரர் கோவிலிலும் அன்னாபிஷேக விழா நடந்தது.
* கொடுமுடி, மகுடேஸ்வரர் கோவிலில், மகுடேஸ்வரருக்கு அன்னத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. அதே போல, சிவகிரி அருகே தலையநல்லூர் நாகேஸ்வரர் கோவிலிலும், அன்னாபிஷேகம், அதைதொடர்ந்து சுமங்கலி பூஜை, அமிர்த வள்ளி தாயாருக்கு சிறப்பு பூஜை நடந்தது.