சிருங்கேரி சாரதா பீட ஆசாரியர்களின் பெருமைகள் எண்ணற்றவை. 30-வது ஜகத்குருவான மூன்றாம் சச்சிதானந்த பாரதீ சுவாமிகள் ஹைதர் அலி, திப்பு சுல்தான், நிஜாம் உல் - முல்க் போன்ற பிற மத மன்னர்களையும் தமது கருணையினால் கவர்ந்தவர். இவர்கள் அனைவருமே அடிக்கடி சுவாமிகளுடன் கடிதம் மூலமாக தொடர்பு கொண்டு அவரது ஆலோசனைகளைக் கேட்டு ஆட்சி செய்து வந்தனர். அத்வைதக் கோட்பாடுகளில் நம்பிக்கையற்ற மைசூர் ராஜ்ஜியத்தைச் சேர்ந்த திவான் பூர்ணய்யா என்பவர் ஒரு சமயம் சுவாமிகளை வாதத்திற்கு அழைக்க, சுவாமிகளும் சம்மதித்தார். சுவாமிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இருவருக்கும் இடையில் ஒரு திரை தொங்க விடப்பட்டிருந்தது.
வாதம் தொடங்கி ஒரு கட்டத்தை அடைந்த போது திரையின் மறுபுறம் ஒரு பெண்ணின் குரல் கேட்பதை அறிந்த திவான் ஆச்சர்யப்பட்டு, திரையை சற்றே விலக்கிப் பார்த்த போது சரஸ்வதி தேவியே சாரதாம்பாளாக அங்கு அமர்ந்திருப்பதைக் கண்டு விக்கித்துப் போனார். மறுகணம் அம்பாளின் உருவம் மறைந்து சுவாமிகளின் உருவம் தோன்றியது. இந்த அற்புதக் காட்சியைக் கண்ட திவான் மெய்சிலிர்த்துக் கண்களில் கண்ணீர் பெருக தன் குற்றத்தை உணர்ந்து வாதத்தை உடனடியாக கைவிட்டார். உடனே திவான் பூர்ணய்யா ஜகத்குரு சச்சிதானந்த பாரதீ சுவாமிகள் (1770-1814) முன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து மன்னித்தருளுமாறு வேண்டிக் கொண்டார்.