பதிவு செய்த நாள்
29
அக்
2018
03:10
ஒரு பிரயோஜனத்தையும் எதிர்பாராமல் பிறருடைய துக்கத்தைப் பொறுக்காமல் அதைப் போக்க வேண்டும் என்ற விருப்பம். எந்தப் பிராணிக்கும் த்ரோஹம் செய்யாமை, சீத -உஷ்ண, சுக -துக்காதிகளை பொறுக்கும் தன்மை, ஸத்யம்தவறாமை, த்வேஷம், பொறாமை முதலிய தோஷங்கள் தீண்டப் பெறாத மனமுடையவனாக எல்லோருக்கும் உபகாரம் செய்தல், காமங்களால் மனக்கலங்காமை, இந்திரியங்களின் அடக்கம், சித்தம் கலங்காமலிருத்தல், உள்ளும் புறமும் பரிசுத்தனாயிருத்தல், வேறு ப்ரயோஜனங்களை விரும்பாமை, லௌகீக வியாபாரங்கள் எல்லாவற்றையும் செய்யாமை, த்ருஷ்ட அத்ருஷ்ட பலன்களில் விருப்பமில்லாமை மிதமாக புசித்தல், மன அடக்கம், சித்தம், நிலை நின்றிருத்தல், பகவானையே ரக்ஷகனாகவும், உபாயமாகவும் பற்றியிருத்தல், சுபாஸ்ரயம் என்று கூறப்படுகிற பகவானின் திவ்யமங்கள விக்ரஹத்தை த்யானஞ் செய்தல், மன ஊக்கத்துடன் இருத்தல், தன்னுடைய அபிப்ராயம் பிறருக்குத் தெரியாதபடி கம்பீரமாயிருத்தல், ஆபத்காலங்களில் தைர்யத்தை இழக்காமல், எவ்வளவு கஷ்டம் வந்தாலும், பெரிய மழை பெய்தாலும் எப்படி மலையானது அசைந்து கொடுக்காதோ, அந்த மாதிரி உறுதியான மனத்துடன் இருத்தல் பசி, தாஹம், சோகம், மோஹம், கிழத்தன்மை, மரணம், என்னும் ஆறு விகாரங்களையும் வென்றிருத்தல், தன் தேகத்தினுடைய சவுகரியத்தில் ஆசைப்படாமை, பிறர்க்கு சவுகரியம் செய்தல், பிறர்க்கு ஹிதோபதேசம் செய்யும் திறமை, வஞ்சனை செய்யாமை, எப்போதும் தன் ப்ரயோஜனத்தை எதிர்பாராமல் இரக்கத்துடன் நடத்தல் இத்தன்மைகளுடையவன் ஸாதுக்களில் சிறந்தவனாவான். எவர் பகவான் எத்தகைய ஸ்வரூபமுடையவன், எத்தகைய விபூதியுடையவன் என்பதை எல்லாம் அடிக்கடி விசாரித்து நன்றாகத் தெரிந்து கொண்டு வேறு எந்த பிரயோஜனத்தையும் எதிர்பாராமல் பகவானைப் பணிகிறார்களோ அவர்களே பக்தர்களில் சிறந்தவர்கள் ஆவர்.