எஸ்.எஸ்.எல்.சி. தேறிய நம் ஸ்வாமிகள் வேலை கிடைக்கும் வரையில் பிக்ஷாண்டார் கோயிலில் தமக்கை வீட்டில் வாசம் செய்து வந்தார். 1951ல் சென்னைக்கு வந்து தபால் தந்தி இலாகாவில் வேலைக்குச் சேர்ந்தார். இருப்பினும், நித்யம் ஸ்தோத்திர பாராயணங்கள், ஸ்ரீமத் ராமாயணம், ஸ்ரீமத் சுந்தர காண்டம், ஸ்ரீமத் பாகவதம், மூக பஞ்சசதி இவைகளை விடாமல் பாராயணம் செய்து வந்தார். அத்துடன் கோவிந்தாச்சாரி என்கிற நண்பர் மூலம் ஏற்பாடாகி பத்து மாதங்கள் தினம் இரவு ஸ்ரீ டி.என். ஜெகதீசன் (உணஞ்டூடிண்ட ணீணூணிஞூஞுண்ண்ணிணூ) என்பவருக்கு ஸ்ரீமத் ராமாயணம் ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் அர்த்தம் சொல்லி வந்தார்.
இவ்விடத்தில் ஸ்வாமிகளுடன் போஸ்ட் ஆபீசில் பணிபுரிந்த கே.எஸ். ராகவ ஐயங்கார் என்பவரைப் பற்றி அவசியம் குறிப்பிட்டாக வேண்டும். வேலைக்குச் சேர்ந்தது முதல், அந்த இளம் பிராயத்திலும் ஸ்வாமிகளின் மஹத்வத்தை நன்கு புரிந்து கொண்ட இவர், அவருடன் நெருங்கிப் பழகிக் கொண்டும், அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொண்டும் ஸ்வாமிகள் தன் வேலை நாட்களிலேயும் பாராயண, ப்ரவசனங்களில் ஈடுபட மிகவும் உதவியாக இருந்தார். இவர் எந்தெந்த ஊருக்கு மாற்றலாகி சென்றாலும், அங்கெல்லாம் ஸ்வாமிகள் அன்புடன் அழைத்துச் சென்று தன் விருந்தாளியாகத் தங்க வைத்து ராமாயண பாகவத உபன்யாஸங்களை ஏற்பாடு செய்திருக்கிறார். இப்படி நாகப்பட்டினம், குற்றாலம், முடிகொண்டான், கும்பகோணம் முதலிய இடங்களில் ஸ்வாமிகளின் ப்ரவசனம் நடந்திருக்கிறது. ஸ்வாமிகளை ஹைதராபாதிற்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சேரும்.