பதிவு செய்த நாள்
29
அக்
2018
03:10
பிரம்மதேவன் ஸ்ருஷ்டியில் மனித ஸ்ருஷ்டி உயர்ந்தது. மனிதனுக்குத் தான் பகுத்தறிவு இருக்கிறது. மிருகங்களுக்கு பகுத்தறிவு இல்லாததினால், கஷ்டத்தைப் போக்கிக் கொள்ள வழி தெரியாமலும் இந்த மாதிரி ஜன்மா திரும்பி வராமல் இருக்க வழி தேடிக் கொள்ள முடியாமலும் இருக்கின்றது. ஆனால் மனிதனால் மட்டுமே பகுத்தறிவினால் கஷ்டத்தைப் போக்கிக் கொள்ளவும் மறு ஜன்மா வந்து கஷ்டப்படாமல் இருப்பதற்கு ஞானத்தை அடைய முயற்சி செய்யவும் முடியும். இந்தப் பிறவியின் பலனே அஞ்ஞானத்தைப் போக்கிக் கொண்டு ஞானத்தை அடைந்து மறு ஜன்மா இல்லாமல் செய்து கொள்வது தான். புருஷர்களுக்கு ஸம்ஸ்காரங்கள் (ஸந்தியாவந்தனம், வேதஅத்யயனம், பூஜை முதலியவைகள்)உண்டு. ஸத்ரீகளுக்கு பதி சுஷ்ரூஷையைத் தவிர வேறு மார்க்கம்
தேவையில்லை.
ஜன்ம லாபத்தை அடைய சிறந்த சுலபமான வழி ‘பக்தி’ மார்க்கம் தான். ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லியபடி பக்தி செய்வது தான் உயர்ந்த முறை. பலனும் சீக்கிரம் கிடைக்கும். தானும் மனஸ் சாந்தியுடன் இருந்து கொண்டும், பிறருக்கும் சாந்தியைக் கொடுத்துக் கொண்டும் இருக்கலாம். ஸ்ரீமத் பாகவத பக்தியைப் பற்றிக் கீழே பார்போம்.
பக்தி என்பது வெளியுலகத்தில் வைத்துள்ள அன்பை பகவானிடத்தில் வைப்பது தான். ஆதிசங்கரர் சொல்லியுள்ள ஷண்மதத்தில் ஏதாவது ஒரு மூர்த்தியிடம் மனதை வைத்தும், பூஜை செய்தும், நம்முடைய எல்லா இந்திரியங்களையும் அந்த மூர்த்தியிடத்தில் ஈடுபடுத்த வேண்டும் கண்களால் மூர்த்தி தரிசனம், காதுகளால் அவருடைய கீர்த்தி ச்ரவணம், கைகளால் பூஜை, கால்களால் ப்ரதக்ஷிணம், மனதால் ரூபத்தை ஸ்மரிப்பது, புத்தியினால் அவதார ரஹஸ்யத்தை சிந்திப்பது, வாக்கினால் நாம ஸங்கீர்த்தனம், சரீரத்தால் நமஸ்காரம் செய்வது - இப்படி நம் சரீரத்தை உபயோகப்படுத்த வேண்டும். இது தான் பெரிய யோகம். சிவானந்தலஹரியில் இதைத்தான் யோகம் என்றும், இப்படி செய்பவன் தான்
யோகி என்றும் ஆதிசங்கரர் சொல்லுகிறார். மோக்ஷம் என்பதை இந்த லோகத்திலேயே அனுபவிக்கலாம். தூங்கி எழுந்ததிலிருந்து தூங்கப் போகும் வரையில் எப்போதும் பகவத் சிந்தையுடனும், பகவந் நாம ஸ்மரணத்துடனும் கார்யங்களைச் செய்து வர வேண்டும். எது செய்தாலும் பகவானிடம் அர்ப்பணம் செய்வது, எல்லாம் அவரால் தான் நடக்கிறது என்கிற ஞாபகம், தயை முதலிய ஆத்ம குணங்களைக் கடைப்பிடிப்பது, க்யாதி, லாபம், பூஜை (புகழ், வருமானம், கவுரவம்) இவைகளில் மனதை வைக்காமல் இருத்தல், உண்மையான மஹான்களை சேவித்தல்,
க்ஷேத்திரங்களுக்கு முறைப்படி நியமத்துடன் சென்று வருதல், இஷ்ட தெய்வத்தையும், பரமாச்சார்யாளையும், எப்போதும் நினைத்துக் கொண்டு எல்லா நல்ல காரியங்களையும் செய்து வருதல், முதலியவைகளால் ‘ஸத்குரு’ கிடைப்பார்.
குரு வாக்யத்தில் விச்வாஸத்துடன் இருத்தல், லௌகீக சவுக்யங்களில் அதிக ஈடுபாடு வைக்காமல் இருத்தல், பகவத் கீதையில் சொல்லியபடி லாப -நஷ்டம், சுக - துக்கம், மானம் - அவமானம் முதலியவைகளை சமமாக பாவித்தல், ஈச்வர ஸங்கல்பத்தில் எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளுதல்.
புருஷப்ரயத்னம் என்பது பகவானை பஜித்தலே!... எப்போதும் பகவானை சிந்தித்திருத்தல், பகவந் நாமாவை உச்சரித்தல், தானாக நமக்கு எது, நல்லதோ அந்தக் கார்யங்களை பகவானே நடத்தி வைப்பார் என்கிற நம்பிக்கையுடன் இருத்தல், புத்ர, தார, வித்த க்ருஹாதிகளில் (புத்ரன், மனைவி, பணம் வீடு) ஈடுபாடு இல்லாமல் இருத்தல், சங்கத்தைச் சேர்க்காமல் இருத்தல், ஏகாந்தத்தை நாடுதல், சங்கீதம் முதலிய எந்த வித்யையும் பகவானுக்கு அர்ப்பணம் செய்தல், வெளியில் ஜனங்களுக்கு தெரியும்படியாக (ணீதஞடூடிஞிடிtதூ) க்காக உபயோகப்படுத்தாமல் இருத்தல், பகவத் சன்னிதியில் மட்டும் ஜன்ம லாபத்திற்காக ஸ்தோத்ரம், ஸங்கீதம் இவைகளை உபயோகப்படுத்துதல் (தியாகப்ரும்மம், புரந்தரதாஸர் போன்ற பக்தர்களை பின்பற்ற வேண்டும்), இவ்வாறு முயற்சி செய்வதே பகவத் பஜனம் என்கிற புருஷ ப்ரயத்னம் ஆகும்.
நாராயண பட்டத்ரி வேதாந்த தேசிகர் ஆகியோரைப் போல் பக்தியை புரிந்து கொண்டு பகவானை வழிபடவேண்டும். ஸாது சங்கம் வைத்துக் கொள்ள வேண்டும். நம்மைப் போன்றவர்களுடன் ஸங்கம் வைத்துக் கொள்ளாமல் இடைவிடாமல் ஒரு நாமத்தை (நம் இஷ்ட தெய்வத்தின் நாமாவை) சொல்லி வரவேண்டும்.
கோபிகைகள் க்ருஷ்ண பகவானிடத்தில் வைத்த பக்திதான் மிகவும் சிறந்தது. முதலில் வீட்டுக் காரியங்களைச் செய்து கொண்டும், பதி ஸுஷ்ரூஷை செய்து கொண்டும், தன் குழந்தைகளைக் கவனித்துக் கொண்டும், பகவானிடத்தில் அன்பு வைத்திருந்தார்கள். இப்படி கார்யங்களை செய்து கொண்டிருக்கும் போதே பகவானை மனதினால் நினைத்துக் கொண்டும் அவன் நாமத்தை இடைவிடாமல் சொல்லிக் கொண்டும் இருந்ததால் அவர்களுடைய பக்தி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வந்து, பக்தி முற்றும் போது மற்ற காரியங்கள் செய்வது தானாக நின்று போய் பகவானுடன் மனது ஒன்றிப் போய் ஆனந்தத்தில் திளைத்தார்கள்.
ஸ்ரீமந் நாராயணீயத்தில் 21 வது தசகத்தில் சொல்லியிருப்பது போல் எந்தக் கோயிலுக்குப் போனாலும் தெய்வத்தைத் தரிசனம் செய்தாலும் நம் இஷ்ட தெய்வந்தான் அந்த ரூபத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டும். க்ருஷ்ண பகவான் கீதையில் ‘என்னிடத்தில் உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் பார்த்துக் கொள் அல்லது உலகத்தில் உள்ள எல்லாவற்றிலும் என்னைப் பார்’ என்று சொல்லுகிறார். அதில் நமக்கு முதலில் சொல்லியபடி பகவானிடத்தில் உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் பார்த்து, மனஸ் சாந்தியுடன் இருப்பதுதான் சுலபமான வழி. நமக்கு மேலே இருப்பவர்களிடம் பொறாமை இல்லாதிருத்தல், சமமானவர்களிடம் ஸ்நேஹம், கீழே இருப்பவர்களிடம் கருணை இருக்க வேண்டும். வர்ணாச்ரம தர்மத்தில் நம்பிக்கை, ஆகார நியமம் இவையிரண்டும் முக்கியம். உலகத்தில் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறான விஷயத்தை நாமும் கடைப்பிடிக்கக் கூடாது. இலங்கையில் விபீஷணன் மட்டும் ராமரிடத்தில் பக்தியுடன் இருந்தார். ஆகையால் ஆஞ்சனேயர் இலங்கையில் எல்லாவற்றையும் எரிக்கும் போது விபீஷணரின் அரண்மனையை மட்டும் எரிக்காமல் விட்டுவிட்டார்.
உண்மையான பக்தன், தன் இஷ்ட தெய்வத்தைப் பூஜை செய்வது, அதன் நாமத்தைச் சொல்லி வருவது, அதன் புராணத்தைப் பாராயணம் செய்வது, அதன் கதைகளை ச்ரவணம் செய்வது முதலியவற்றை செய்து வரவேண்டும். இவ்வாறு பக்தி செய்வது வந்தால் தானாக ஞானம் வரும். பரமாசார்யாள் எந்த ஆனந்தத்துடன் இருந்து வந்தாரோ அந்த ஆனந்தத்தை எல்லா ஜீவர்களும் அடையலாம் என்பது தான் பக்தியின் பெருமை.
பக்தன் எந்த விதமான கஷ்டத்தையும் தாங்கிக் கொள்ள முடியும். சுலபமாக அதைத் தாண்டியும் விடலாம். பெரிய பளுவான மரக்கட்டையைத் தரையில் தள்ள முடியாது. ஆனால் அதை ஜலத்தில் மிதக்கவிட்டால் சிறிய குழந்தை கூட சுலபமாக தள்ளிவிடலாம். அதைப் போல எந்தப் பெரிய காரியத்தையும் மனதில் பகவத் த்யானம், நாமஸ்மரணம், என்கிற ஜலத்தில் இறக்கிவிட்டால் சுலபமாக நடத்தி விடலாம்.
பக்தன் பகவானிடம் சவுக்கியத்திற்கான ஸாதனத்தை கேட்கக்கூடாது. ஸாத்யத்தை அதாவது சவுக்யத்தை மட்டும் கேட்க வேண்டும். பசுமாட்டைக் கேட்கக்கூடாது. பாலைக் கேட்க வேண்டும். அப்போது தான் தொந்தரவு கிடையாது.
பகவந் நாமத்தை ஸதா சொல்லிக் கொண்டும், பகவத் பஜனம் செய்து கொண்டும் இருந்தால் குடும்பமும் நல்லபடியாக இருக்கும். வேரில் ஜலம் விட்டால் எப்படி கிளைகளுக்கும், இலைகளுக்கும் ஆகுமோ அது போல் பகவத் பஜனம் குடும்பத்தையும் காப்பாற்றும். ஆத்ம லாபத்தையும் அளிக்கும்.
பக்தனின் லக்ஷணம்:- பேராசை, மோஹம், பயம் முதலியவை பக்தனுக்குக் இருக்கக்கூடாது. பகவந் நாமாவை எப்போதும் எங்கும் சொல்லி வருபவரை பகவான் தன்னைச் சேர்ந்தவனாக நினைத்துக் கொண்டு அவனை எல்லாக் கோணத்திலும் காப்பாற்றுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார் என்று ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லியிருப்பதால் பகவந் நாமாவை சொல்லி வருபவர்கள் வாழ்க்கையில் எதைப் பற்றியும் கவலைப்படவேண்டியதில்லை. கீதையில் பகவான் ஒவ்வொருவர் ஹ்ருதயத்திலும் ஈச்வரன் இருக்கிறார் என்றும் அஞ்ஞானம் என்கிற மாயை மூடியிருப்பதால் நமக்குத் தெரியவில்லை என்றும் சொல்லுகிறார். நம் மனதாகிற கண்ணாடியில் அஞ்ஞானம் என்கிற அழுக்கு ஜன்ம ஜன்மாவாக அதிகம் ஏறி இருப்பதால் கண்ணாடிக்குப் பக்கத்தில் இருக்கிற வஸ்து நமக்கு தெரியவில்லை. மேலே சொல்லியபடி பக்தியை செய்து வந்தால் நம் மனதில் உள்ள அழுக்கு (பாவங்கள்) நன்றாக துடைக்கப்பட்டு ஹ்ருதயத்தில் உள்ள பகவானை நாம் அனுபவிக்கலாம்.
ஆண்டாள் திருப்பாவையில் ‘செய்யாதன செய்யோம்’ என்று சொல்லியபடி சாஸ்திர விரோதமான கார்யங்களை செய்யக்கூடாது. மருந்து சாப்பிடும் போது எவ்வாறு பத்தியத்தை மீறக்கூடாதோ அதுபோல் பக்தி மார்க்கத்தில் இருப்பவர்கள் சாஸ்திரத்தில் எதை செய்யக் கூடாது என்று சொல்லியிருக்கிறதோ அதைச் செய்யக்கூடாது. குலசேகராழ்வார் முகுந்த மாலையில் சொல்லியபடி நம்முடைய பூர்வ கர்மபலன்படி நம் வாழ்க்கையில் எது ஏற்படுகிறதோ அதை வருத்தப்படாமல் ஏற்றுக் கொண்டு பகவானை பஜித்து வர வேண்டும்.
‘யத் யத் பவ்யம் பவது பகவன் பூர்வ கர்மானு ரூபம்!’
ஸ்ரீமத் பாகவதத்தில் ஸாது சங்கத்தின் பெருமையை அடிக்கடி சொல்லியிருக்கிறது. ஆகையால் ஸாது லக்ஷணம் தெரிந்து கொண்டு அந்த மாதிரி ஸாதுவிடம் சங்கம் வைத்துக் கொள்வது தான் நல்லது. ஸாது லக்ஷணங்களும் பாகவதத்தில் நிறைய இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தக் காலத்தில் உண்மையான ஸத்ஸங்கம் துர்லபமாக இருப்பதால் மஹா பெரியவாள் அருள் வாக்குப்படி சாச்வதமான கீர்த்தியைஉடைய வியாசர், வால்மீகி, ஆதிசங்கரர் போன்றவர்கள் செய்த க்ரந்தங்களைப் பாராயணம் செய்து வருவதே ஸத்ஸங்கமாகும்.
மேலும் பழைய முறைப்படி (சாஸ்திர விதிமுறைகள்) இந்தக் காலத்தில் இருக்க முடியாது. பகவானுடைய கதையைக் கேட்பது, கோயில் ப்ரதக்ஷினம் செய்வது, முதலியன மிகவும் சிரத்தையுடன் இருந்த போதிலும் இந்த உலக ஆசைகளை விடவே முடிவதில்லை. ஆனால் பகவனுடைய பஜனம் நல்லது செய்யும் என்ற தீர்மானத்துடன் உலக விஷயங்கள் எல்லாம் முடிவில் துக்கத்தை கொடுக்குமாகையால், உலக ஆசைகளை விட முடியாத போதிலும், நம்மால் அவைகளை விட முடியவில்லையே என்ற தோஷ புத்தியுடன் ஈடுப்பட்டுக் கொண்டும், மேலும் பகவத் பஜனத்தை பெருக்கிக் கொண்டே போக வேண்டும். (பகவன் நாம ஜபத்தை 1/4 மணி, 1/2 மணி, 1 மணி என்று படிப்படியாகப் பெருக்கிக் கொள்ளுதல்)
மேற்கண்ட வழிகளை நாம் முயற்சியோடு அனுஷ்டித்தாலும் பகவானின் கருணை ஒன்றினாலேயே அவர் நம் ஹ்ருதயத்தில் புகுந்து அதன் மூலமாகவே எல்லாப் பற்றுதல்களும் விலக வேண்டும்.