பதிவு செய்த நாள்
30
அக்
2018
11:10
பந்தலூர்:சபரிமலையை பாதுகாக்க வேண்டும் என, வலியுறுத்தி, பிதர்காட்டில் நடந்த பேரணியில் திரளான மக்கள் பங்கேற்றனர்.பந்தலூர் அருகே பிதர்காட்டில், சபரிமலையை பாதுகாக்க வலியுறுத்தி, பேரணி நடந்தது. பிதர்காடு சுங்கம் பகுதியில் செண்டை மேளத்துடன் துவங்கிய பேரணிக்கு குருசாமி மோகன்தாஸ் தலைமை வகித்தார். மாத்ருபாரதி சேவா சங்க நிர்வாகி விஜயன், சுகுமாரன் முன்னிலை வகித்தனர். சரண கோஷத்துடன் துவங்கிய பேரணி, பிதர்காடு பஜார், கைவட்டா வழியாக பாட்டவயல் சென்றது.பின்னர் பாட்டவயல் பகவதி அம்மன் கோவில் வளாகத்தில் சபரிமலையை பாதுகாக்க வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
அதில், இந்துக்கள் பல்லாண்டு காலமாக போற்றி பாதுகாத்து வரும் சபரிமலையின் சடங்கு, சம்பிரதாயங்களை ஒடுக்கும் வகையில், வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை திரும்ப பெற வேண்டும்; மேலும், அங்கு, போலீசார் மூலம் சபரிமலையில் பிரச்னையை அதிகரிக்க செய்யும் அரசு நிர்வாகத்துக்கு கண்டனம்; பெண்கள் மூலம் பிரச்னைகள் அதிகரிப்பதை தவிர்க்க, பெண்கள் சபரிமலையின் புனிதத்தை உணர்ந்து செயல்பட வேண்டும், என, பலரும் பேசினர். நிகழ்ச்சியில், நிர்வாகிகள் சந்திரமோகன், சுப்ரமணி, ராஜேந்திரன், பாலமுருகன், பாலகிருஷ்ணன மற்றும் பாட்டவயல், பிதர்காடு, சோலாடி, முக்கட்டி, பெரும்பள்ளி, குந்தலாடி, பொன்னானி, மாங்கம்வயல், நெலாக்கோட்டை, அம்பலமூலா, வெள்ளேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.