பதிவு செய்த நாள்
01
நவ
2018
05:11
பொங்கல் பண்டிகை
சூரியனின் தேர் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கும் தினம் இது. இன்றிலிருந்து ஆறுமாதங்கள் தேவலோகத்தில் பகல்நேரம். பயிர்கள் செழுமையாக வளர நீர் நிலைகளிலுள்ள நீரை மேகங்களுக்கு எடுத்துச் செல்ல சூரியக் கதிர்கள் உதவுகின்றன. அவன் உபகாரத்தால் வளர்ந்த கரும்பு, நெல், மஞ்சள், இஞ்சிக் குலைகள் இவற்றை வைத்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகின்றோம். பெண்கள் சூரியன் உதிக்கு முன் எழுந்து வாசலில் நீர் தெளித்து மங்கலக்கோலமிட்டு, காவி பூசுவர். அரக்கு நிறம் துர்க்கைக்குரியது. துக்கம் வராமலிருக்க கஷ்டங்கள் தொலைய, மங்கல வாழ்வு நிலைக்க செம்மண் பூசப்படுகிறது. இன்று ஆதித்ய இருதயம், சூரிய ஸ்லோகம் படிப்பது நல்லது. பொங்கல் பாத்திரத்தில் மஞ்சள் குங்குமமிட்டு, பசு மஞ்சளைப் பிணைத்த கயிறைக் கங்கணமாகக் கட்டி அவரவர் சம்பிரதாயப்படி பொங்கல் வைக்கவேண்டும். தீபாராதனை காட்டும் போது குல தெய்வத்தையும் மூதாதையரையும் பிரார்த்தனை செய்தால் நல்லதே நடக்கும். இன்றிலிருந்து உத்தராயண புண்ய காலம் ஆரம்பம்.
பூஜை மஹிமை
இந்திரனுக்கு தம்பியாக அவதாரம் செய்த வாமனரை உபேந்திரன் என்று அழைப்பர். தேவேந்திரன் விரும்பிய படி அவன் தனிப்பூஜையை நிறுத்தி, இந்திர உபேந்திரனுடன் ஸங்க்ராந்தியில் ஸூர்ய நாராயண பூஜையும், மறுநாள் கோபூஜையும் நடைபெறுகிறது.
ஸ்ரீராமர் ஸூர்யனைத் தினமும் காயத்ரியாலும், ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தாலும், ஸூர்ய நமஸ்காரத்தாலும் வழிபட்டு, இராவணனை அழித்தார். பாண்டவர்களோ ஸூர்யனை உபாசித்ததின் மூலம் அக்ஷய பாத்திரம் பெற்றனர். ஸூர்ய உபாஸனையால்தான் ஸாம்பன் என்னும் கிருஷ்ணனுடைய புத்திரன் குஷ்டரோகத்தினின்றும் விடுபட்டான்.
சூரிய மண்டலத்தின் நடுவில், நாராயணன் இருக்கிறார் என்றும், சூரிய மண்டலத்தின் மத்தியில் இருப்பவர் பரம சிவன் என்றும் புராணங்கள் கூறுகின்றன. ஆரோக்கியத்தை அளிப்பவர் சூரியன். நவக்கிரகங்களில் முதல்வர் சூரியன். வேத புருஷனின் கண்கள் சூரியன். அப்படிப்பட்ட உலகுக்கே ஒளி தரக்கூடிய சூரியனை இந்த்ரோபேந்திரனுடன் ஸங்க்ராந்தியில் பூஜை செய்வது மிகவும் சிறந்ததும் ஸகல ஸௌபாக்கியங்களையும் அளிக்க வல்லதுமாகும்.
குறிப்பு:
1. ஆதித்யஹ்ருதயம் பாராயணம் செய்வது விசேஷம், வெட்ட வெளியில் நண்பகலில், சூரியக் கோலம் வரைந்து அதில் பூஜை செய்யலாம்.
2. மகர ஸங்கராந்தி அன்றும் மறுநாள் கோ பூஜை அன்றும் அரிசி மாவினால் பலகையிலோ அல்லது தரையிலோ (அவரவர் குல வழக்கப்படி) செம்மண் இட்டு ரதம், சூரிய சந்திரனை வரைந்து பூஜை செய்யவும்.
பலன்: தேஜஸ், மற்றும் மனம் ஒருநிலைக்கு வரும், தேக ஆரோக்கியம், ஸகல ஐஸ்வரியங்களும் உண்டாகும்.
ஸ்ரீ ஸூர்ய நாராயண பூஜை
காலம்: ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் காலம் மகர ஸங்க்ராந்தி எனப்படும். அது பொங்கல் திருநாள். அந்நன்நாளில் நல்ல நேரத்தில் பொங்கலிட்டு பகல் வேளையில் சூரியநாராயணனுக்குப் பூஜை செய்ய வேண்டும்.
1. பூஜைக்கு வேண்டிய பொருட்கள்
பொதுவாக பூஜைக்கு தேவையான பொருட்கள்
1. மஞ்சள் பொடி
2. குங்குமம்
3. சந்தனம்
4. பூமாலை
5. உதிரிப்பூக்கள்
6. வெற்றிலை, பாக்கு
7. ஊதுபத்தி
8. சாம்பிராணி
9. பஞ்சு (திரிக்காக)
10. நல்லெண்ணெய்
11. கற்பூரம்
12. வெல்லம்
13. மாவிலை
14. வாழைப்பழம்
15. அரிசி
16. தேங்காய்
17. தயிர்
18. தேன்
19. தீப்பெட்டி
20. பூணூல்
21. வஸ்த்ரம்
22. அக்ஷதை (பச்சரிசியுடன் மஞ்சள் பொடி கலந்தது)
23. பஞ்சாம்ருதம் (வாழைப்பழம், பால், தேன், நெய், சர்க்கரை, கலந்தது)
24. கோலப்பொடி / அரிசி மாவு
25. பஞ்சகவ்யம்:
1. பசுவின் சிறுநீர் (கோமியம்), 2. பசுவின் சாணம், 3. பால், 4. தயிர், 5. நெய் இவை ஐந்தும் சேர்ந்த கலவையே பஞ்ச கவ்யமாகும்.
26. திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால்.
குறிப்பு: ஹோமங்களுக்கு நெய் உபயோகிப்பது உத்தமம். ஒரு சில பூஜைகளில் நவதான்னியங்கள், கருகு மணிமாலை, பனைஓலை, மஞ்சள் கொத்து, ஏலக்காய் பொடி, கண் மை, அகல் விளக்கு, மூங்கில் தட்டு, பஞ்சினால் செய்த மாலை, போன்ற சில விசேஷ பொருட்கள் தேவைப்படுகின்றன. அந்தந்த பூஜையை செய்யும்போது அதற்கு தேவையானவற்றை முதலிலேயை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மாற்றுப் பொருள்கள்
பூஜைக்கு உரிய சில பொருள்கள் கிடைக்காமலிருக்கலாம். இந்த நிலையில் ஒரு பொருளுக்குப்பதிலாக இந்தப் பொருள்தான் மாற்றுப் பொருள் என்பது விரத கல்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை.
1. தேனுக்குப் பதிலாக வெல்லம்,
2. வஸ்த்ரம், ஆபரணம், சத்ரம், சாமரம், முதலிய ராஜோபசாரங்களுக்குப் பதிலாக அக்ஷதை (அ) புஷ்பம்.
2. கோலத்தில் ரதம், சூரிய நாராயணரை வரைந்து அல்லது கலசத்தில் அலங்கரித்து வைக்கவும்.
3. நைவேத்ய பொருட்கள்: சாதம், சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், பாயஸம், வடை, நெய், அப்பம், கரும்பு, இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்து, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு
4. சிகப்பு நிற வாசனையுள்ள பூக்களால் அர்ச்சிப்பது உத்தமம்
5 இந்திரன் மற்றும் உபேந்திரன் (மகாவிஷ்ணு) ஆகியோருக்கு கரும்பு, நைவேத்யம் பண்ணப்படுகிறது.