பதிவு செய்த நாள்
07
நவ
2018
12:11
மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே, கடத்துாரில் பாதுகாப்பற்ற முறையில் இருக்கும், அய்யனார் சிலையை பாதுகாக்க, கோவில் அமைக்க வேண்டும்.பழமையான வழிபாட்டு முறையாகவும், காவல் தெய்வ வழிபாடாகவும் அய்யனார் வழிபாடு உள்ளது. ஒருநிலப் பரப்பில் வாழ்ந்தவர்கள், படையெடுப்பு மற்றும் புயல், வெள்ளம், வறட்சி, போன்ற இயற்கையின் தாக்குதல் காரணமாக, நாடோடி வாழ்க்கை வாழ்த்தனர். நிலையான குடியிருப்பு, விவசாயம் என நாகரிக வளர்ச்சியால், குழுவாக வசிக்க துவங்கினர். தாங்கள் வழிபடும் தெய்வங்களுக்கு கோவில் அமைத்தனர்.
கடத்துார் ராஜவாய்கால் அருகே மருதகாளியம்மன் கோவிலின் கிழக்கே, 300 மீட்டர் தொலைவில், நான்கு அடி உயரம், மூன்றுஅடி அகலமுள்ள அய்யனார் சிலை உள்ளது. அமர்ந்தநிலையில் இடது காலை உயர்த்தி வைத்து, வலதுகாலை தரையில் ஊன்றியபடி சிலை உள்ளது. இடது கையை காலின் மீது வைத்துள்ளார். வலது கையில் தண்டம் உள்ளது. அய்யனாருக்கு நெருக்கமாக இடதுபக்கம் இரண்டு, வலது பக்கம் இரண்டு என நான்குபெண் சிற்பங்கள் உள்ளன. கழுத்தில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய ஆபரணமும், இடது மற்றும் வலது புஜத்தில் காப்பும் அணிந்து உள்ளார். மிகவும்பழமையான இந்தசிலை,தற்போது, கோவில் எதுவும்இன்றி, மரத்தடியில் உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பல தலை முறையாக இந்தசிலை, இங்குள்ளது; அய்யனார் அப்பச்சி என அழைக்கிறோம். போதிய பாதுகாப்பின்றி, வரலாற்று சிறப்புமிக்க சிலை, வீணாகிறது. அரசு நடவடிக்கை மேற்கொண்டு, சிலையை பாதுகாக்க வேண்டும் .என்றனர்.