திட்டக்குடி : திட்டக்குடி சுகாசன பெருமாள் கோவிலில் தை பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.திட்டக்குடி வேதாந்தவல்லி சமேத சுகாசன பெருமாள் கோவிலில் தை பிரம்மோற்சவ விழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் உற்சவத்தில் இந்திரவிமானத்திலும், 2ம் நாளில் சூர்ய பிரபையிலும், 3ம் நாளில் சேஷ வாகனத்திலும், 4ம் நாளில் கருடசேவை, 5ம் நாள் அனுமார் வாகனம், 6ம் நாள் யானை வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏழாம் நாள் சுவாமி திருக்கல்யாணமும், 8ம் நாள் குதிரை வாகனத்திலும், ஒன்பதாம் நாள் உற்சவத்தில் தைப் பூச திருத்தேர் விழாவும், மாலை தீர்த்த வாரியும் நடந்தது. பத்தாம் நாள் உற்சவத்தில் காலை புஷ்பயாகம், சப்தாவர்ணம் செய்யப்பட்டு கொடியிறக்கம் நடந்தது. விழாவில் ஸ்ரீதர் பட்டாச்சாரியார், திட்டக்குடி பகுதி பிரமுகர்கள், சுகாசன பெருமாள் சேவா சங்கத்தினர் உட்பட பலர் உடனிருந்தனர்.