பதிவு செய்த நாள்
08
நவ
2018
12:11
பொள்ளாச்சி:நோய் தாக்குதலுக்கு பயந்து, வேறு கிராமத்துக்கு மக்கள் குடி பெயர்ந்ததால், கிராமம் மறைந்து போனது. ஊர் இருந்ததற்கு அடையாளமாக பழமையான ஆலமரமும், சிலைகளும் மட்டுமே உள்ளன.
பொள்ளாச்சி அருகே உப்பிலியனூர் என்றழைக்கப்படும் கரியாஞ்செட்டிபாளையம் கிராமம் உள்ளது. கிராமம் அருகே பழமையான ஆலமரமும், அதற்கு கீழ் சிலைகளும் உள்ளன. இவை மறைந்து போன ஒரு கிராமத்தின் சுவடாக உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
கரியாஞ்செட்டிபாளையம் அருகே ஊஞ்சப்பாளையத்தில், நாயக்கர் வம்சத்தை சேர்ந்த, குடும்பத்தினர் அதிகம் வசித்துள்ளனர். விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு, குடும்பம் நடத்தினர்.பல ஆண்டுகளுக்கு முன், வேகமாக பரவிய நோய் காரணமாக அச்சத்தில் மக்கள் ஊரை காலி செய்து, மக்கள் வேறு பகுதிகளுக்கு சென்றதாக மக்கள் தெரிவித்தனர்.
கரியாஞ்செட்டிபாளையம் மக்கள் கூறுகையில், ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் வசித்த வர்கள், பிளேக் நோயால் பாதித்ததால், நோய் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, வேறு கிராமங்களுக்கு குடிபெயர்ந்தனர்.அனைத்து குடும்பங்களும் வெளியேறி யதால், அந்த கிராமம் இருந்ததற்கான அடையாளமே மறைந்து போனது.
ஆனால், கிராமத்தின் நினைவுகள் மட்டும் இன்னும் மறையாமல் உள்ளது, என்றனர். ஊஞ்சப்பாளையம் கிராமம் இருந்தற்கு, பல ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் பிரமாண்ட மாய் காட்சியளிக்கிறது.மரத்தின் வேர்கள் படர்ந்து, பார்ப்பதற்கே கம்பீரமாக தோற்றம் அளிக்கும் ஆலமரத்தின் கீழ், கைகளை கூப்பி வணங்கிய படி பழமை வாய்ந்த மூன்று சிலைகளும்; அதன் அருகே சிறு சிலைகளும் உள்ளன.
வருவாய்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஊஞ்சப்பாளையம் கிராமம் இருந்தது. அந்த கிராம மக்கள் வேறு இடங்களுக்கு சென்று விட்டனர். முக்கால் ஏக்கர் நிலம் மட்டும் நீர்வழிப் பாதையாக உள்ளது. இதற்காக தனி ஆவணங்களும் இருந்தன. தற்போது, பொதுப்பாதையில் அமைந்துள்ள ஆலமரம், சிலைகள் மட்டும் உள்ளன, என்றார்.