பதிவு செய்த நாள்
08
நவ
2018
11:11
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், சரயு நதிக் கரையில் தீபாவளியை ஒட்டி, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட அகல் விளக்குகள் ஏற்றி, புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. உ.பி., பைசாபாத் மாவட்டத்தில் உள்ள, அயோத்தியில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தீபாவளியை கொண்டாடினார். இந்த விழாவில் முக்கிய விருந்தினராக, தென் கொரிய அதிபர் மனைவி ஜுங் சுக் பங்கேற்றார்.தீபாவளியையொட்டி, சரயு நதிக்கரை முழுவதும், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. மேலும், நதிக் கரையில், களிமண்ணால் ஆன, 30 அடி உயர ராமர் சிலையும், 15 மற்றும், 25 அடி உயர ஹனுமன் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தன.
சரயு நதிக் கரையில், 3 லட்சத்து, 1,152 விளக்குகள் தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் எரிந்து, சாதனை படைத்ததாக, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் அதிகாரபூர்வ அதிகாரி ரிஷிநாத் கூறினார். கடந்த, 2016ல், ஹரியானா மாநிலத்தில், 1.50 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்ட உலக சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.