திருப்பரங்குன்றத்தில் சஷ்டி பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2018 12:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் 6 நாட்கள் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். கோயில் சார்பில் அவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின் விசிறிகள், சண்முகார்ச்சனையை தரிசிக்கவும், மற்ற நேரங்களில் சுவாமி பாடல்கள் ஒளிபரப்பவும் அனைத்து மண்டபங்களிலும் மெகா டிவிக்கள் வைக்கப்பட்டுள்ளன.உபயதாரர்கள் மூலம் மதியம் தேன், சர்க்கரை கலந்த தினை மாவு, மாலையில் சர்க்கரை கலந்த எலுமிச்சம் பழச்சாறு, இரவு சுவாமி புறப்பாட்டிற்கு பின் பால் வழங்கப்படுகிறது.
சஷ்டி மண்டபம் முன் காலி இடங்களில் தகர மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.சஷ்டி திருவிழா நடக்கும் 7 நாட்களும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட உள்ளது. கோயில் வளாகம், கிரிவலப் பாதை கழிப்பறைகள் சீரமைக்கப்பட்டும், மாநகராட்சி நடமாடும் கழிப்பறை வேனும் தயார் நிலையில் உள்ளன.