பதிவு செய்த நாள்
08
நவ
2018
01:11
வீரபாண்டி: செங்குந்தர் மாரியம்மன், முத்துக்குமாரசுவாமி கோவில் ஐப்பசி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். சேலம், காளிப்பட்டி செங்குந்தர் மாரியம்மன் கோவில் மற்றும் முத்துக்குமாரசுவாமி கோவில்களின் ஆண்டு ஐப்பசி திருவிழா, கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது.
நேற்று (நவம்., 7ல்) விழாவின் முக்கிய நிகழ்வான, குண்டம் இறங்குதல் நடந்தது. முதலில், கோவில் பூசாரி தலையில் கரகத்துடன், குண்டம் இறங்குதலை துவக்கி வைத்தார். பின்னர், வரிசையாக கங்கணம் கட்டி விரதமிருந்த ஏராளமான பக்தர்கள், கோவிலை வலம் வந்து கையில் குழந்தைகளுடன் குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். மாலையில் அக்னி, பூங்கரக ஊர்வலத்துடன் சிங்க வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று (நவம்., 8ல்) காலை, பொங்கல் வைத்தல், மாலையில் பூந்தேர் ஊர்வலம், கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (நவம்., 9ல்) முத்துக்குமாரசுவாமிக்கு, பொங்கல் வைத்து படையலிட்டு சிறப்பு பூஜை நடக்கிறது. மாலையில் சிறப்பு அலங்காரத்தில், முத்துக்குமார சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும், 10ல் சத்தாபரணம் மற்றும் வசந்த விழாவுடன் ஆண்டு திருவிழா நிறைவு பெறும்.