பதிவு செய்த நாள்
14
நவ
2018
01:11
வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று (நவம்., 13ல்) நடந்தது.
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்தாண்டு கந்தசஷ்டி திருவிழா, காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் கடந்த, 8ம் தேதி துவங்கியது. ஏழு நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழாவின் முதல் நாளில் இருந்து காலை, மாலை இருவேளையும் யாகசாலை பூஜை நடைபெற்றது.
ஆறாம் நாளான நேற்று (நவம்., 13ல்), கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சுப்பிரமணி சுவாமி, சூரசம்ஹாரத்திற்காக பச்சை நாயகி அம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி, சூரபத்மன், பானுகோபன், சிங்கமுகாசுரன், தாரகாசுரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.பின், சுப்பிரமணிய சுவாமிக்கு, வெற்றி வாகை சூடும் நிகழ்ச்சியும், முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு சாந்தாபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது.
சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அரோகரா கோஷம் எழுப்பினர்.கந்தசஷ்டி விழாவின் ஏழாம் நாளான இன்று (நவம்., 14ல்) காலை 9:00 மணிக்கு வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணமும், திருவீதியுலாவும் நடக்கிறது.
கோவை காந்திபார்க் பாலதண்டாயுதபாணி கோவில், வீரகேரளம் சிங்காரவேலன் கோவில் மற்றும் கோவை சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள, ஏராளமான கோவில்களில் நேற்று (நவம்., 13ல்) சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.