பதிவு செய்த நாள்
14
நவ
2018
01:11
உடுமலை: உடுமலையில், முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா, பக்தர்களின் வெற்றி வேல்... வீரவேல் கோஷம் முழங்க நேற்று (நவம்., 13ல்) நடந்தது.
தீயவை அழித்து, நல்லவை அருளும் விழாவான, கந்த சஷ்டி விழா, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், 8ம் தேதி, காப்பு கட்டுதலுடன்
துவங்கியது.தொடர்ந்து சுவாமிக்கு, தினமும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள், காப்பு கட்டி, சஷ்டி விரதத்தை துவக்கினர். முக்கிய நிகழ்ச்சியான, சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா, நேற்று (நவம்., 13ல்) நடந்தது.
பிற்பகல், 3:15 மணிக்கு, முருகப்பெருமான் விரதம் இருந்து, தனது அம்மையான சக்தியிடம் வேல் வாங்கும் உற்சவம் நடந்தது.தொடர்ந்து, சக்தி வேலுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், சூரனை வதம் செய்யும் போர்க்கோலத்தில் எழுந்தருளினார்.
நூற்றுக்கணக்கான பக்தர்களின் வெற்றி வேல், வீரவேல் கோஷம் முழங்க, பிரதான வீதிகளில் ஆக்ரோஷமாக எழுந்தருளினார்.நான்கு மூலைகளில், கஜமுகன், சிங்கமுகன், பானுகோபன், சூரபத்மன் என பல வடிவங்கள் எடுத்து, ஆடி வந்த அரக்கனின், தலையை கொய்து வதம் செய்து, வெற்றி கொண்டார்.தொடர்ந்து, சுவாமிக்கு, மகா அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன.
இன்று (நவம்., 14ல்) காலை, 10:00க்கு, வள்ளி தெய்வானை உடனமர் சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு, வெள்ளி ரதத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.
அதே போல், முத்தையா பிள்ளை லே-அவுட், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா நேற்று (நவம்., 13ல்) நடந்தது.