பதிவு செய்த நாள்
14
பிப்
2012
11:02
பழநி : மாசி மகா சிவராத்திரியில், "பாரி வேட்டை க்கான தடையை முழுமையாக கண்காணிக்க வனத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிராம, சமுதாய வாரியாக முந்தைய காலங்களில் கடைபிடிக்கப்பட்ட சில பழக்கவழக்கங்கள், பல பகுதிகளின் இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது. இதில், மாசி மாத மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் பாரி வேட்டை குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட கிராம மக்கள், இரவு முழுவதும் வனப்பகுதியில் வேட்டையாடுவதும், மறுநாள் அவற்றை பகிர்ந்து உண்பதும் வழக்கமாக உள்ளது. இதில் மான், முயல், நரி உள்பட அனைத்து வகை வன உயிரினங்களும், வேட்டையாடப்படுகிறது. பாரம்பரிய பழக்கம் என்ற அடிப்படையில் வன உயிரின வேட்டையாடுதலை, அரசு தடை செய்துள்ளது. இருப்பினும் சில பகுதிகளில் அதிகாரிகள் அலட்சியத்தால், பாரி வேட்டை நடக்கிறது. இந்நிலையில் இந்தாண்டிற்கான மாசி மாத சிவராத்திரி, வரும் பிப்., 20 ல் வருகிறது. பிப்., 19, 20, 21 ஆகிய நாட்களில் பாரி வேட்டையை முழுமையாக கண்காணித்து தடுக்க வனத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலையடிவார கிராமங்களில், விழிப்புணர்வு பிரசாரம், ஒலி பெருக்கி மூலம் பாரி வேட்டை தடை, வன உயிர்களை காப்பதன் முக்கியத்துவம், வேட்டையில் ஈடுபடுவோருக்கான தண்டனைகள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. வேட்டையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.