சிவகிரி : சிவகிரி முப்புடாதியம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. சிவகிரி பிஎஸ்ஆர் தெருவில் நாயக்கர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்புடாதியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பல்வேறு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 11ம் தேதி கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, பூமிதேவி பூஜை, ஹோமம் உட்பட பல்வேறு பூஜைகள், தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேக நாளான நேற்று முன்தினம் காலை 3 மணிக்கு யாகசாலை பூஜை, 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடந்தது. 10.30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிவகிரி ராஜகோபாலபட்டர், ராஜேஸ்பட்டர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். விழாவில் சிவகிரி டவுன் பஞ்.,தலைவர் ரணவீறு தலைமை வகித்தார். மூத்த வக்கீல் கதிர்வேல், நிலக்கிழார் திருப்பதி, சேனைத்தலைவர் மகாஜன சங்க தலைவர் கருப்பையா, ரவி அன்னதானத்தை துவக்கி வைத்தனர். பில்டிங் கான்ட்ராக்டர் முனியாண்டி கல்வெட்டை திறந்து வைத்தார். நாயக்கர் சமுதாய தலைவர் ராமர் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.