பதிவு செய்த நாள்
15
நவ
2018
02:11
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம், ஒரே நாளில், 4.04 கோடி ரூபாய் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி, திருமலை யில் காணிக்கைளை, தேவஸ்தானம் தினசரி கணக்கிட்டு, வங்கியில் வரவு வைத்து வருகிறது.
சராசரியாக உண்டியல் மூலம், 2 கோடி முதல், 3 கோடி ரூபாய் வரை, ஒரு நாளில் வசூலாவது வழக்கம். பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் நாட்களில், உண்டியல் வருமானம் அதிகமாக இருக்கும். இந்நிலையில், நேற்று முன்தினம், பக்தர்களின் கூட்டம் அதிகமிருந்ததால், ஒரே நாளில், உண்டியல் மூலம், 4.04 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலையில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பிரம்மோற்ஸவம் முடிந்த பின் வரும், திருவோண நட்சத்திரத்தன்று, புஷ்பயாகத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, நேற்று (நவம்., 14ல்) மதியம், திருமலையில் புஷ்பயாகம் நடந்தது. இதற்காக, ஸ்ரீதேவி பூதேவி மேத மலையப்பஸ்வாமிக்கு, திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன்பின், உற்ஸவமூர்த்தி களை கோவிலுக்குள் உள்ள மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர்.அவர்களுக்கு, சாமந்தி, ரோஜா, அரளி, சம்பங்கி, மல்லிகை, முல்லை, தாழம்பு, தேன்பூ, தாமரை, அல்லி உள்ளிட்ட மலர்கள், துளசி, வில்வம், மரிகொழுந்து, மருவம் உள்ளிட்ட இலைகளாலும், அர்ச்சகர்கள் புஷ்ப யாகத்தை நடத்தினர்.இதற்காக, 7 டன் மலர்கள், ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தது.