பதிவு செய்த நாள்
23
நவ
2018
06:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவு பல்வேறு வாகனங்களிலும் சுவாமி, தெய்வானை வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நவ., 20 சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, 21 காலை கங்காளநாதர் சுவாமி புறப்பாடு, மாலை காமதேனு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வீதி உலா, நவ., 22 பட்டாபிஷேகம், இன்று(நவ.,23ல்) காலை தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து கோயிலுக்குள் அனுக்ஞை விநாயகர் முன் மாலை 5:00 மணிக்கு யாகம் வளர்க்கப்பட்டு பூஜை, தீபாராதனை நடந்தது. அதே நேரத்தில் மலைமேல் தீப மண்டபம் அருகிலுள்ள உச்சி பிள்ளையார் முன் கும்பங்களில் புனிதநீர் நிரப்பி வைத்து, விநாயகர் பூஜை, அக்னிலிங்க பூஜை, வர்ண பூஜை, தீபாராதனை முடிந்து, தீப கொப்பரையில் புனிதநீர் தெளிக்கப்பட்டது. கோயிலுக்குள் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்திய கிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள் சன்னதிகளில் பாலதீபம் ஏற்றப்பட்டது. கோயில் மணி அடிக்கப்பட்டதும், மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. நாளை தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.