பதிவு செய்த நாள்
24
நவ
2018
11:11
சபரிமலை: சபரிமலையில், போலீஸ் கெடுபிடி காரணமாக, கோவில் வருமானம், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, தற்போது மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது. இந்நிலை தொடர்ந்தால், தேவசம்போர்டு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கும் நிலை உருவாகும்.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களும் செல்ல, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்த உத்தரவை அமல்படுத்த, மாநில அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, பக்தர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை, கேரள போலீசார் விதித்துள்ளனர். மண்டல காலத்தில், சபரிமலையில் போலீஸ் ஏற்படுத்தியுள்ள கட்டுப்பாடுகளால், பக்தர்கள் வருகை கணிசமாக குறைந்துள்ளது. சன்னிதானத்தில் தங்குவ.தற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
கூட்டமாக சரண கோஷமிட்டால், அவர்களை கைது செய்கின்றனர். இதனால், பக்தர்கள் தரிசனம் முடித்து விட்டு, அப்படியே புறப்பட்டு விடுகின்றனர். |கட்டுப்பாடுகளை விலக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், கேரள அரசு அதை அமல்படுத்தவில்லை. இந்நிலையில், சபரிமலையில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ள வருமானம் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு நடை திறந்து, ஏழு நாட்கள் கடந்த போது, மொத்த வருமானம், 22 கோடி ரூபாயாக இருந்தது; இந்த ஆண்டு, 8 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. கடந்த ஆண்டு அரவணை விற்பனையில், 10 கோடி கிடைத்தது; இந்த ஆண்டு, 3 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. அப்பம் விற்பனையில் கடந்த ஆண்டு, 1.47 கோடி கிடைத்தது; இந்த ஆண்டு, 29 லட்சம் ரூபாய்க்கு மட்டும் விற்பனையாகியுள்ளது. காணிக்கையிலும், 4 கோடி ரூபாய் குறைவு ஏற்பட்டுள்ளது. ‘நிலைமை இப்படியே நீடித்தால், கோவிலை நிர்வகித்து வரும், திருவாங்கூர் தேவசம்போர்டு, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கும்’ என, ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.