பதிவு செய்த நாள்
26
நவ
2018
02:11
திருத்தணி: நாகேஸ்வரர் மற்றும் படவேட்டம்மன் ஆகிய கோவில்களில், நேற்று நடந்த மகா கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் வழிபட்டனர்.திருத்தணி அடுத்த, பொன்பாடி கிராமத்தில், பழமை வாய்ந்த உமா மகேஸ்வரி உடனுறை நாகேஸ்வரர் கோவிலின் திருப்பணிகள் முடிந்து, நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகம் துவங்கியது.நேற்று, காலை, 8:00 மணிக்கு, கலச ஊர்வலம் நடந்தது. காலை, 8:45 மணிக்கு, கோவில் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஓம் நமச்சிவாய என, பக்தி கோஷம் எழுப்பினர்.தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன. அதே நேரத்தில் கோவில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வள்ளி, தெய்வானை, நவகிரகங்கள், காலபைரவர், சூரியன் சண்டிகேஸ்வரர் ஆகிய சன்னதிகளிலும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.அதே போல், இக்கோவில் அருகில் புதியதாக கட்டப்பட்ட படவேட்டம்மன் கோவிலும், நேற்று, காலை, 9:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திருத்தணி, சென்னை, திருவள்ளூர் மற்றும் ஆந்திர மாநில பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவபெருமானை வழிபட்டனர்.