பதிவு செய்த நாள்
07
டிச
2018
12:12
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி, காலீஸ்வரர் கோவில் தேர் திருப்பணி முடிவுறும் நிலையில் உள்ளதால், 60 ஆண்டுகளுக்கு பின் சித்திரை விழா தேரோட்டம் நடக்கும் என, பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், சீட்டணஞ்சேரியில், சிவகாமி சுந்தரி உடனுறை காலீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில், இறைவனுக்கும், இறைவிக்கும் தனித்தனியாக கொடி மரங்கள் உள்ளன.மேலும், ஐந்து நிலை ராஜகோபுரம், மூன்று நிலை ரிஷி கோபுரம் என, இரண்டு பெரிய கோபுரங்களும், ஆறு சிறிய கோபுரங்களும் உள்ளன.கோவில் விசேஷங் களுக்கு தனித்தனியாக மண்டபங்களும், தனியாக யாகசாலைகளும், 1 ஏக்கரில் அழகான குளமும் உள்ளன.இக்கோவிலில், சித்திரை மாதத்தில், சித்திரை விழா விசேஷமாக நடைபெறும். அப்போது, தேரோட்டமும் கோலாகலமாக நடக்கும்.கடந்த, 60 ஆண்டுகளுக்கு முன், கோவில் தேர் பழுதானதையடுத்து, தேரோட்டம் இல்லாமல் விழா நடக்கிறது.
இந்நிலையில், கிராம மக்கள் மற்றும் தனி நபர்களின் உதவியோடு, 60 லட்சம் ரூபாய் செலவில், 37 அடி உயரம் உடைய அழகிய மரத்தேர் செய்யும் பணி, சில மாதங்களாக நடக்கிறது.
இப்பணி முடிவுறும் தருவாயில் உள்ளதையடுத்து, வரும் சித்திரை விழாவில் தேரோட்டம் நடத்த, கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.பல ஆண்டுகளுக்கு பின், காலீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற உள்ளதால், சிவபக்தர்கள் மற்றும் சுற்று வட்டார கிராமத் தினர் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.