புதுடில்லி : சுப்ரீம் கோர்ட்டிற்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதால் ஒன்று அரசியலமைப்பு நெறிமுறைகள் அழிந்து போகும் அல்லது சுப்ரீம் கோர்ட், பார்லியின் 3வது அவையாக மாறும் என அட்டர்ஜி ஜெனரல் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நேற்று நடந்த விழா ஒன்றில் பேசிய அவர், உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு நமது நாட்டில் சுப்ரீம் கோர்ட்டிற்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு நெறிமுறைகளை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பயன்படுத்தும் முறை மிக மிக ஆபத்தனது. இது அரசியலமைப்பு நெறிமுறையை சாகடிக்கும் அல்லது நாட்டின் முதல் பிரதமரான நேரு பயந்தது போல் சுப்ரீம் கோர்ட், பார்லியின் 3வது அவையாக மாறிவிடும் என்பது உண்மையாகி விடும். சபரிமலை வழக்கில், மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி, மத நம்பிக்கை தொடர்பான விவகாரங்களில் நாங்கள் தலையிட முடியாது என்கிறார். ஆனால் மற்ற 4 நீதிபதிகளும் அரசியலமைப்பு அறநெறிகளின் படி தீர்ப்பு வழங்குகிறார். நீங்கள் ஒரு தனிநபரை வைத்து வழக்கை கையாள்கிறீர்கள். ஆனால் ஒட்டுமொத்த நாட்டு மக்களை பொருத்து கையாளப்பட வேண்டும். மத நம்பிக்கைகளில் தலையிடும் போது நீதிபதிகள் கவனமாக கையாள வேண்டும். இதில் கோர்ட் தலையிடுவதை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் விரும்பவில்லை. அரசியலமைப்பு நெறிமுறை என்பது அனைத்து அதிகாரங்களையும் கொண்ட பலமான ஆயுதம். அதை கவனமாக கையாள வேண்டும். ஒரு விவகாரத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு, அனைத்தும் முடிந்து விட்ட பிறகும் அதில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க முடியும். சபரிமலை வழக்கில் சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் இருவேறு குரல்களில் பேசி உள்ளது. இதில் அரசியலமைப்பு நெறிமுறை எங்கே உள்ளது. சட்டத்தில் கொண்டு வரப்படும் திருத்தங்கள் என்பது சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்களை நீர்த்துபோக செய்வதாகவே உள்ளது. படிப்பறிவு குறைவாக இருந்தாலும் மக்களுக்கு தெரியும் தங்களுக்கு எது நல்லது என்று என்றார்.