சிலாத முனிவருக்கு பிள்ளைச் செல்வம் இல்லை. குறைதீர திருவையாறு சிவபெருமானை (ஐயாறப்பர்) வேண்டினார். சிவனருளால் ஒரு ஆண்மகன் பிறந்தான். பிள்ளைக்கு செப்பேசன் என்று பெயரிட்டு மகிழ்ந்தார். ஆனால், அப்பிள்ளை பதினாறு வயது வரை மட்டுமே உயிர்வாழ்வான் என்ற உண்மையை அறிந்த முனிவர், பட்ட துன்பத்திற்கு அளவே இல்லை. தந்தையின் துயரம் பொறுக்காத செப்பேசன் விதியை வெல்லும் வழிதேடினார். கோயிலில் இருக்கும் சூரிய புஷ்கரணிக் கரையில் அமர்ந்து தவத்தில் ஆழ்ந்தார். ஈசனின் உள்ளம் உருகியது. செப்பேசரின் பாவங்களைப் போக்கும் வழிகாட்டினார். சூரியபுஷ்கரணி, சந்திர புஷ்கரணி, கங்கை, காவிரி, பாலாறு ஆகிய ஐந்து தீர்த்தங்களை வரவழைத்து தீர்க்காயுளைத் தந்தருளினார். அதோடு மட்டுமல்லாமல், அவருக்கு கைலாயத்தின் முதல்வாசலை காவல்புரியும் அதிகாரத்தை வழங்கினார். அவரே நந்தி என பெயர் பெற்றார். இன்று நந்தி இல்லாத கோயில்களே இல்லை. அவர் என்றும் வாழ்பவர். வியாக்ரபாதரின் மகளும், உபமன்யு முனிவரின் தங்கையுமான சுயசாம்பிகையை அவர்மணம் செய்துகொண்டார். திருவையாறு கோயிலில் தெற்குக்கோபுரத்தில் நுழைந்தால் வலப்புறத்தில் செப்பேசர் தவம் செய்த சூரியபுஷ்கரணியைத் தரிசிக்கலாம். தீர்க்காயுள் வேண்டுவோர், ஐயாறப்பரைத் தரிசித்து வரலாம்.