பழநி கோவில் சிலை மோசடி : பொன் மாணிக்கவேல் அதிரடி
பதிவு செய்த நாள்
15
டிச 2018 01:12
சென்னை: பழநி முருகன் கோவில், சிலை மோசடி தொடர்பாக, 10 நாட்கள் அங்கேயே தங்கி விசாரிக்க உள்ளேன், என, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி, பொன் மாணிக்கவேல் கூறினார்.திண்டுக்கல் மாவட்டம், பழநியில், புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நவபாஷணத்தால் வடிவமைக்கப்பட்ட, மூலவர் சிலை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சிலையை தரிசிப்பதற்காகவே, ஆயிரக்கணக்கான பக்தர்கள், தினமும் கோவிலுக்கு வந்து செல்வர்.ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, இக்கோவிலில், நவபாஷண சிலைக்கு மாற்றாக, 2004ல், 220 கிலோ எடையில், பஞ்சலோக சிலை செய்யப்பட்டுள்ளது.
மக்களின் கவனத்தை ஈர்க்க, நவபாஷண சிலையை மறைப்பது போல, பஞ்சலோக சிலையை நிறுவி, அபிஷேகம் செய்யப்பட்டு வந்தது.ஆனால், பஞ்சலோக சிலை செய்ததில் மோசடி நடந்ததால், சிலையின் முகம் மற்றும் மார்பு பகுதிகள் கறுத்து விட்டன. இதனால், அந்த சிலையை ஒரு அறையில் வைத்து, ஸ்தபதி முத்தையா, 77; அப்போது, கோவில் இணை கமிஷனராக இருந்த, கே.கே.ராஜா, 66, உள்ளிட்டோர், பூட்டி விட்டதாக கூறப்படுகிறது.இந்த தகவல், ஐ.ஜி., பொன் மாணிக்கவேலுக்கு தெரிய வந்தது. விசாரணைக்கு பின், முத்தையா, ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்; அவர்கள், ஜாமினில் வந்துள்ளனர்.இந்நிலையில், நவ., 30ல், பொன் மாணிக்கவேல் ஓய்வு பெற்றார். அவரை ஓராண்டுக்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக, சென்னை உயர் நீதிமன்றம் நியமித்து உள்ளது.இரு தினங்களுக்கு முன், பழநிக்கு சென்ற பொன் மாணிக்கவேல், மீண்டும் விசாரணையை துவக்கி உள்ளார். இது குறித்து, பொன் மாணிக்கவேல் கூறுகையில், பழநி முருகன் கோவிலில், 10 நாட்கள் தங்கி, சிலை மோசடி தொடர்பாக, நேரடி விசாரணை நடத்த உள்ளேன். விரைவில், குற்றவாளிகள் கைது செய்யப்படுவர், என்றார்.
|