தென் மாநில குருசாமிகள் கூட்டம் : தேவசம்போர்டு நடவடிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2018 01:12
சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவதை சரி செய்வதற்காக, தென்மாநில குருசாமிகள் கூட்டத்தை தேவசம்போர்டு கூட்டுகிறது. முதல் கூட்டத்தை கோவையில் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சபரிமலையில் போராட்டம் நடந்தது. இதையடுத்து 144 தடை உத்தரவு, பம்பையில் பார்க்கிங்குக்கு தடை போன்ற காரணங்களால் தற்போதய மண்டல சீசனில் பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ளது. இதனால் தேவசம்போர்டின் வருமானமும் கணிசமாக குறைந்தது.
இதை சரிகட்டும் நடவடிக்கையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஈடுபட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் குருசாமிகளின் கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளது. முதல் கூட்டம் அடுத்த வாரம் கோவையில் நடக்கிறது. தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், பிற மாநிலங்களிலும் நடக்கிறது. இதில் சபரிமலையில் பிரச்னை எதுவும் இல்லை, தற்போதய சீசனில் வந்த பக்தர்களிடம் கேட்கப்பட்ட கருத்துகளின் வீடியோ மற்றும் போட்டோ உள்ளடக்கி விளம்பரம் தயாரித்து டிவி மற்றும் நாளிதழ்களில் வெளியிடவும் முடிவு தேவசம்போர்டு திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம் பத்தனம்திட்டையில் சங்பரிவார் சார்பில் குருசாமிகள் மாநாடு நடந்த நிலையில் தேவசம் போர்டு இந்த முடிவை எடுத்துள்ளது.கடந்த ஆண்டு சபரிமலை சீசன் வருமானம் 342 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு இது பெரிய அளவில் குறையும் என தெரிகிறது. திருவிதாங்கூர் தேவசம்போர்டின் கீழ் 1249 கோயில்கள் உள்ளது. இதில் 61 கோயில்கள் மட்டுமே வருமானம் வரும் கோயில்கள். இதர கோயில்களில் சபரிமலை வருமானத்தை வைத்துதான் பூஜைகள் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.