பதிவு செய்த நாள்
22
டிச
2018
12:12
செஞ்சி: பெங்களூரு செல்லும், விஸ்வரூப கோதண்டராமர் சிலை செஞ்சி கோட்டை வழியாக செல்வதற்கு வசதியாக சிலையில், 8.4 அங்குலத்திற்கு அகலம் குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே உள்ள ஈஜிபுரத்தில், 108 அடி உயரத்தில், 11 தலைகளுடன் விஸ்வரூப கோதண்டராமர் சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
கோதண்டராமர், ஆதிசேஷன், பீடம் என மூன்று பிரிவாக சிலையை கொண்டு செல்கின்றனர். இதில் கோதண்டராமர் சிலையின் முகம், சங்கு சக்கரம் மட்டும் வடிக்கப்பட்ட, 64 அடி நீளம், 25 அடி அகலம், 3 லட்சம் கிலோ எடையிலான சிலையை, 240 சக்கரங்கள் பொருத்திய பிரத்யேக லாரியில், திருவண்ணாமலை மாவட்டம், அகரகொரகோட்டையில் இருந்து, கொண்டு செல்கின்றனர். சிலை அமைப்பு குழு தலைவர், டாக்டர் சதானந்தம் தலைமையில், மூன்று பொறியாளர்கள் உள்ளிட்ட, 20 பேர் அடங்கிய குழுவினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலையை எடுத்து வரும் வாகனம் செல்ல, 27 அடி அகல சாலை வசதி வேண்டும். கடந்த வாரம் புறப்பட்ட சிலை வந்த வழியில் அகலம் குறைவான இடங்களில் கடை, வீடுகளை நஷ்ட ஈடு கொடுத்து அகற்றினர். இந்த சிலை, 18 ம் தேதி இரவு செஞ்சிக்கு வந்தது. செஞ்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு, செஞ்சி கோட்டை வழியாக செல்ல வேண்டும். செஞ்சிகோட்டையில், செல்லியம்மன் கோவில் அருகே உள்ள கோட்டை மதில் சுவர்கள் உள்ள பகுதியில், சாலையின் அகலம் குறைவாகவும், சற்று வளைவாகவும் உள்ளது.
எனவே தற்போதுள்ள அகலத்துடன், சிலையை எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அத்துடன், ஓசூர் அருகே உள்ள சாமல்பட்டி ரயில்வே பாலத்தின் வழியாக செல்வதற்கும் சிலையின் அகலத்தை குறைக்க வேண்டும் என தெரியவந்தது. இதையடுத்து, பொறியாளர் குழுவினர், கடந்த இரண்டு நாட்களாக நடத்திய ஆய்வின் முடிவில், சிலையின் கூடுதலாக பக்கவட்டில் உள்ள, பாறை கற்களை வெட்டி அகற்ற முடிவு செய்தனர். இதன்படி சிலையில், 8.4 அங்குலத்திற்கு அகலத்தை பிரத்யேக இயந்திரம் மூலம் நேற்று வெட்டி அகற்றினர். இப்பணி நேற்று முடிவடைந்த போதும், இன்று பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு பக்தர்களின் வாகனங்கள் அதிகம் செல்லும் என்பதால், சிலையை நாளை அல்லது நாளை மறுநாள் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.