மதங்களை கடந்த புரட்சித்துறவி... அனைவருக்கும் உபதேசித்த திருத்தலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2018 12:12
திருப்புத்துார்: ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உலகத் தத்துவத்தை பாடிய சங்கப்புலவர் கணியன் பூங்குன்றனார் அவதரித்தது சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தான். அது போல மதங்களைக் கடந்து மனிதநேயத்தை புரட்சித்துறவி கற்பித்ததும் திருப்புத்துார் அருகே ஒரு கிராமத்தில் தான்.
சில மாற்றங்களை நிகழ்த்தி ஆன்மிகத்திற்கு புத்துயிர் கொடுக்கும் மகான்கள் அவ்வப்போது தோன்றுவார்கள். அவர்களை புரட்சித்துறவிகள் எனப் பாராட்டுகிறார்கள். அதில் நமக்கு தெரிந்த சிலரில் விவேகானந்தர், ராமானுஜர் போன்றோர். அதில் ஆயிரம் ஆண்டு கடந்தும் நம்மால் மறக்க முடியாதவர் ராமானுஜர். கிபி 1017ஆம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அப்போது பூதபுரி என்று அழைக்கப்பட்ட தற்போதைய ஸ்ரீபெரும்புதுாரில் அவதரித்தவர். வைணவ சமயத்தை தோற்றுவித்தவரும்,ஜாதி,மதங்களைக் கடந்து மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் என்ற உயரிய கருத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வலியுறுத்திய மகான் ஆவார். அந்த புரட்சித் துறவி உபதேசித்த சிறப்பை பெற்ற தலம் திருப்புத்துார் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் ஆகும்.108 வைணவத் தலங்களுள் பிரசித்தி பெற்றதலமாகும்.
யமுனாச்சாரியாரின் வைணவத் தத்துவங்களைக் கற்பதற்காகவே இரண்டாண்டு தவமிருந்தார் ராமானுஜர். யமுனாச்சாரியாரின் ஐந்து சீடர்கள் ஒருவரான திருக்கோட்டியூர் நம்பியிடம் எட்டெழுத்து மந்திரத்தை "எவருக்கும் வெளியிடக்கூடாது" என்ற நிபந்தனையின் பேரில் உபதேசம் பெற்றார். ஆனால் உபதேசம் பெற்றவுடன் திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மேலேறி மாந்தர் அனைவருக்கும் கேட்கும்படி அதை எல்லோருக்கும் உபதேசம் செய்தார். இதனால் மிகுந்த கோபமுற்ற திருக்கோட்டியூர் நம்பி ‘‘ரகசிய மந்திரத்தை இப்படி யாவருக்கும் சொல்வது குருவின் சொல்லுக்கு துரோகமிழைப்பதாகும்’ என்றும் ‘இதற்கு நரகம் புக நேரிடும்’ என்றதற்கு ராமானுஜர், ‘எல்லோரும் முக்தியடைய, தான் ஒருவன் நரகத்திற்கு செல்வதும் பாக்கியமே’ என்றார். இந்த பதிலைக் கேட்ட திருக்கோட்டியூர் நம்பி, இவரே "எம்பெருமானார்" என்று மகிழ்ச்சி தெரிவித்த புண்ணிய தலமாகும். இதை நினைவு கூறும் வகையில், சவுமியநாராயணப் பெருமாள் கோயிலின் பிரசித்தி பெற்ற அஷ்டாங்க விமானம் அருகே தெற்கு திசையில் அவரது திருஉருவமும், திருக்கோஷ்டியூர் நம்பிகளின் திருவுருவமும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் இவருக்கு தனி சன்னதியும் உண்டு. கோபுர, விமானத்தை தரிசிக்கும் போது ராமானுஜரையும் நீங்கள் தரிசிக்கலாம்.