பதிவு செய்த நாள்
26
டிச
2018
11:12
செஞ்சி: பெங்களூரு செல்லும் விஸ்வரூப கோதண்டராமர் சிலை, ஏழு நாடகளுக்கு பின், செஞ்சியில் இருந்து நேற்று புறப்பட்டு சென்றது.கர்நாடக மாநிலம், பெங்களூரு ஈஜிபுரத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலில், 108 அடி உயரத்தில், விஸ்வரூப கோதண்டராமர் சிலை நிறுவப்பட உள்ளது.பீடம், கோதண்டராமர், ஆதிசேஷன் என மூன்று பிரிவுகள் உடைய சிலையின் மைய பகுதியான, 64 அடி நீள கோதண்டராமர் சிலை, திருவண்ணாமலை மாவட்டம், அகரகொரகோட்டை கிராமத்தில் செய்யப்பட்டது.
இந்த சிலை, 240 டயர்கள் பொருத்திய பிரமாண்ட லாரியில் எடுத்துச் செல்லப்படுகிறது. சிலையை எடுத்து செல்வதற்காகவே, மூன்று இன்ஜினியர்கள் தலைமையில், 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. லாரியுடன் தனித்தனி வாகனங்களில் பயணிக்கும் இக்குழு, வழியில் ஏற்படும் தடைகளை அகற்றி, சிலையை எடுத்து செல்கிறது.சிலை, 18ம் தேதி இரவு, விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கு வந்தது. செஞ்சி கோட்டை வழியாக, திருவண்ணாமலை செல்ல திட்டமிட்டிருந்தனர். வழியில் கோட்டை மதில்கள் குறுகலாக இருந்ததால், சிலையின் பக்க வாட்டில், கூடுதலாக இருந்த பாறைகளை, இன்ஜினியர் மற்றும் தொழிலாளர்கள் குழு, 21ம் தேதி வெட்டி அகற்றியது.இதன்பின் நடத்திய ஆய்வில், 65க்கும் மேற்பட்ட இடங்களில் மின் கம்பங்களை அகற்ற வேண்டியிருந்தது. அத்துடன், மழையால் செஞ்சி நகரம் வழியாக செல்லும் சாலை, சேறும், சகதியுமானது. எனவே, சிலையை மாற்று வழியில் கொண்டு செல்ல, குழுவினர் திட்டமிட்டனர்.இதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு சென்று, அங்கிருந்து அவலுார்பேட்டை வழியாக, திருவண்ணாமலை செல்ல முடிவு செய்தனர்.மாநில நெடுஞ்சாலைத் துறையின் அனுமதி பெற்று, நேற்று மதியம், 2:00 மணிக்கு செஞ்சியில் இருந்து புறப்பட்டனர். ஏழு நாட்களுக்கு பின் புறப்பட்ட லாரி, 200 மீட்டர் செல்வதற்குள்ளாக, லாரியின் டயர் ஒன்று பஞ்சர் ஆனது.இதை சரி செய்து புறப்பட்டபோது, வெள்ளிமேடு பேட்டையில், வீடு அகற்றியதற்கு நஷ்ட ஈடு பாக்கி கேட்டும், தீவனுாரில் தங்கி இருந்த இடத்திற்கும், ஓட்டல் பாக்கி கேட்டும், சிலர் லாரியை செல்ல விடாமல் தடுத்தனர்.போலீசார் தலையிட்டு, சமரசம் செய்து வைத்ததை தொடர்ந்து, கோதண்டராமர் சிலை லாரி பயணத்தை தொடர்ந்தது.