பதிவு செய்த நாள்
01
ஜன
2019
02:01
குன்னுார்: குன்னுார் ஜெகதளா கிராமத்தில், ஹெத்தையம்மன் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுக இனமக்கள் ஆண்டுதோறும், டிச., ஜன., மாதங்களில், ஹெத்தையம்மன் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதில், ஜெகதளா, காரக்கொரை, மல்லிக்கொரை, பேரட்டி, ஓதனட்டி, மஞ்சுதளா, மேல் பிக்கட்டி, கீழ் பிக்கட்டி ஆகிய, 8 கிராமங்களை சேர்ந்த மக்கள், 48 நாட்கள் விரதம் மேற்கொண்டனர்.
இதில், ஹெத்தைக்காரர்கள் என அழைக்கப்படும் பக்தர்கள், ஜெகதளா ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து, தும்மனாடா, பேரகல் கிராமங்கள் வழியாக, தாய்வீடாக அழைக்கப்படும் கொதுமுடி கோவிலுக்கு, பாரம்பரிய குடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டு அருள்வாக்கு கூறி ஆசி வழங்கினர்.தொடர்ந்து, 8 ஊர்களுக்கு சென்று வந்து தங்கிய பிறகு, அம்மனுக்கு சிறப்பு வஸ்திரம் நெய்யப்பட்டது. கடந்த, 28ம் தேதி காரக்கொரை மடிமனையில், குண்டம் திருவிழாவை தொடர்ந்து இங்கு தங்கிய ஹெத்தைக்காரர்கள், நேற்று முன்தினம், ஜெகதளா சென்றனர். பண்டிகை நாளான, நேற்று, மடியோரை பகுதிக்கு அனைவரும் சென்று, நதியில் இருந்து அம்மனுக்கு புதிய வஸ்திரம் சார்த்தி, 8 கிராமங்களை சேர்ந்தவர்கள், ஹெத்தை தடி, பாரம்பரிய வர்ண குடைகள் ஏந்தியவாறு அம்மனை எடுத்து வந்தனர். ஆடல்பாடல்களுடன் பக்திபரவசத்துடன் வந்த இந்த ஊர்வலத்தின் போது, பக்தர்கள் வெள்ளை துணியை தரையில் விரித்து, அம்மனை வரவேற்றனர்.பிறகு, ஹெத்தையம்மன் கோவிலில், பூஜைகள் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்துபெத்துவா, தாவணெ, குந்தா, சின்னகுன்னுார், எப்பநாடு, கேத்தி, பந்துமை உட்பட பல்வேறு கிராமங்களில் பாரம்பரியமாக ஹெத்தை யம்மன் திருவிழா நடக்கிறது.