பதிவு செய்த நாள்
22
பிப்
2012
11:02
நகரி: பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்கத்தை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்ய, திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோவில் உண்டியலில் மாதம் ஒன்றுக்கு, 80 கிலோ தங்கம், திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருமானமாக கிடைக்கிறது. இதுவரையில், காணிக்கையாக கிடைத்த தங்கத்தை உருக்கி வெங்கடேச பெருமாள், பத்மாவதி தாயார் உருவம் பொறித்த டாலர்கள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் மீது புகார் எழுந்ததால், தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்தது. முதல் தவணையாக, 726 கிலோ, 2வது தவணையாக 892 கிலோ தங்கம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிலும், மூன்றாவது தவணையாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், 493 கிலோ தங்கமும் டெபாசிட் செய்யப்பட்டது. இனி, திருமலை கோவில் உட்பட தேவஸ்தானம் சார்பில் செயல்பட்டுவரும் பெருமாள் கோவில்களையும் சேர்த்து, பிரதி மாதம் சராசரியாக கிடைக்கும், 80 கிலோ தங்கத்தை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, (240 கிலோ என்ற கணக்கில்) வங்கிகளில் டெபாசிட் செய்ய, தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெய் வாங்க முடிவு: வரும் நான்கு மாத காலத்திற்கு, 4 லட்சம் கிலோ நெய்யை வாங்க, தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இந்த ஆண்டு சென்னையை சேர்ந்த ஸ்ரீ கணேஷ் ஏஜன்சிஸ் நிறுவனம், கிலோ நெய், 271 ரூபாய் விலைக்கு சப்ளை செய்ய, தேவஸ்தான நிர்வாகத்துடன் டெண்டர் மூலம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. எட்டு ரகமான தரத்துடன் நெய்யை, இந்த ஒப்பந்ததாரர்கள் சப்ளை செய்ய வேண்டும். இதன்படி, 27 கோடியே 10 லட்ச ரூபாய்க்கு நெய் வாங்க உள்ளதாகவும், தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.