பதிவு செய்த நாள்
22
பிப்
2012
11:02
செஞ்சி:மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த மயானக் கொள்ளை நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடக்கும் மாசி திருத்தேர் விழா, 20ம் தேதி மகா சிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாள் விழாவான நேற்று, மயானக் கொள்ளை நடந்தது.மேல்மலையனூர் கோவில் ஸ்தல புராணத்தின் படி, பிரம்மாவின் தலைகளில் ஒன்றை சிவபெருமான் கொய்ததால், கோபமடைந்த சரஸ்வதி தேவியின் சாபத்தால், பிரம்மாவின் கபாலம் சிவபெருமானின் கரத்தில் ஒட்டிக் கொள்கிறது. சிவபெருமானுக்கு படைக்கும் உணவை, இந்த கபாலம் உண்டு விடுவதால், பசியால் வாடும் சிவபெருமான் பித்து பிடித்து, காடு மலைகளில் அலைகிறார். சிவராத்திரியன்று மேல்மலையனூர் மயானத்தில் வந்து தங்குகிறார்.மறுநாள் பார்வதி தேவியின் அம்சமான அங்காளம்மன், வந்திருப்பது சிவபெருமான் என அறிந்து, அவருக்கு உணவு படைக்கிறார். இதை எடுக்க சிவனின் கரத்தில் இருந்து விடுபட்டு, தரையில் இறங்கும் பிரம்ம கபாலத்தை, அங்காளம்மன் விஸ்வரூபம் எடுத்து, தன் காலால் தரையில் மிதித்து ஆட்கொள்கிறார். சிவபெருமான் சாப விமோசனமடைகிறார். இந்த புராணத்தை நினைவு கூறும் நிகழ்ச்சியே, மேல்மலையனூர் மயானத்தில், நேற்று விழாவாக நடந்தது. இதில், கொள்ளை விடுவதற்காக பக்தர்கள் ஏராளமான உணவு பொருட்களை குவித்து வைத்திருந்தனர். கோவிலில் இருந்து அங்காளம்மன், மயானத்திற்கு புறப்பட்டு வந்த போது, வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். இவர்களில் சிலர் உயிருடன் இருந்த கோழியை பற்களால் கடித்து பலி கொடுத்தனர். காய்கறிகள், உணவு பொருட்கள், தானியங்கள், நாணயங்கள் மற்றும் கோழிகளை அம்மன் மீது வீசி எறிந்து, பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்திருந்தனர்.