ஈரோடு: பொங்கல் திருவிழாவையொட்டி, பக்தர்கள் பலர் பூங்கரகம், அக்னிச்சட்டி எடுத்து, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி, அம்மனை வழிபட்டனர்.
ஈரோடு சூரம்பட்டிவலசு, சுயம்பு மஹா மாரியம்மன் கோவில் திருவிழா, கம்பம் நடுதல், பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று, கோவில் சார்பில், தீர்த்த ஊர்வலம் நடந்தது. இதில், சூரம்பட்டி வலசு, பழையபாளையம், சங்கு நகர், காசிபாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள், கருங்கல்பாளையம் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து, ஊர்வலமாக வந்தனர். சூரம்பட்டி பகுதி பக்தர்கள், தனித்தனி குழுவாக, அலகு குத்தியும், அக்னிச்சட்டி எடுத்தும், பூங்கரகம் எடுத்தும், ஊர்வலமாக, ஆடிப்பாடி வந்து, மாரியம்மனை தரிசனம் செய்தனர். அணைக்கட்டு பகுதியை சேர்ந்த பக்தர்கள் பலர், வேல்அலகு குத்தி, பக்தியில் ஆக்ரோஷமாக ஆடி வந்தனர். பெண்கள் பலர், தங்கள் குழந்தைகள், கணவர் மற்றும் குடும்பத்தார், நலனை வேண்டி, மாரியம்மனுக்கு, அக்னிச்சட்டி எடுத்து வந்தனர். பக்தர்களின் இந்த ஊர்வலத்தால், சூரம்பட்டி வலசு முழுவதும் பக்தி பரவசமாக காணப்பட்டது. இன்று, பொங்கல் வைத்தலும், மாவிளக்கு ஊர்வலமும் நடக்கிறது.