திருவாடானை: திருவெற்றியூர் கோயில் குளத்தில் துணிகள் துவைத்து குளிப்பதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர். திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயில் உள்ளது. பக்தர்கள் கோயிலில் இரவு தங்கியிருந்து, மறுநாள் காலையில் சுவாமி தரிசனம் செய்வது சிறப்பு. சிவகங்கை, புதுக்கோட்டை உட்பட வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. பக்தர்கள் கோயில் முன்புள்ள தீர்த்த குளத்தில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வார்கள். பக்தர்களின் வசதிக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி, அப்பகுதி மக்கள் அழுக்கு துணிகளை துவைப்பதும், மாடுகளை குளிப்பாட்டுவதுமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். வெளிமாவட்ட பக்தர்கள் சுகாதாரக்கேடாக உள்ள குளத்தில் நீராடுவதற்கு தயக்கம் காட்டு கின்றனர். கோயில் தேவஸ்தான நிர்வாகத்தினர் சுகாதாரக்கேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.