பதிவு செய்த நாள்
12
ஜன
2019
02:01
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் புதுப்பிக்கப்பட்ட 30 தீர்த்தங்களை மக்களுக்கு அர்ப்பணிக்க இன்று (ஜன.,12) ராமேஸ்வரத்திற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகிறார். தீர்த்த தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மற்றும் வெளிப் பகுதியில் 64 தீர்த்தங்கள் இருந்தது. 1964ல் ஏற்பட்ட புயலுக்கு பிறகு கோயிலுக்கு வெளியில் இருந்த 42 தீர்த்தங்கள் புதைந்தும், ஆக்கிரமிப்பிலும் இருந்தது. இதனால் பக்தர்கள் கோயிலில் மட்டும் 22 தீர்த்தங்களில் நீராடிச் சென்றனர். இந்நிலையில், விவேகானந்தா கேந்திரத்தின் பசுமை ராமேஸ்வரம் அமைப்பினர், கடந்த ஐந்து ஆண்டுகளாக ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபத்தில் புதைந்து போன 30 தீர்த்தங்களை கண்டு பிடித்து 5 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்தனர்.
இத்தீர்த்தங்களை பக்தர்கள், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இன்று கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அர்ப்பணிக்க உள்ளார். காலை 8:30 மணிக்கு ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மங்கள தீர்த்த குளம் அருகில் நடக்கும் வருண யாக பூஜையில் பங்கேற்று, 30 கலசத்தில் உள்ள தீர்த்தத்தை மங்கள தீர்த்தத்தில் ஊற்றி தீர்த்த சங்கராமி பூஜை, மகா தீபாராதனை நடக்கிறது. பின் அங்கிருந்து புறப்பட்டு காலை 10:30 மணிக்கு பசுமை ராமேஸ்வரம் அமைப்பின் மங்கம்மா சத்திரம் சென்று தியானம் செய்கிறார். காலை 10:35 மணிக்கு விழா நடக்கும் கோசுவாமி மடத்திற்கு சென்று, காலை 10:50 மணிக்கு தீர்த்த அர்ப்பணிப்பு பலகையை திறந்து வைக்கிறார். காலை 11:10 மணிக்கு கவர்னர் பேசுகிறார். முன்னதாக நேற்று மாலை 3:00 மணிக்கு ராமநாதபுரம் வந்த கவர்னர் சுற்றுலா மாளிகையில் மக்களிடம் மனுக்கள் பெற்றுக்கொண்டார். பின், பட்டணம்காத்தான் ஊராட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்ட துாய்மை பாரதம் இயக்க கண்காட்சியை திறந்து வைத்து துாய்மைப் பணியை துவக்கி வைத்தார்.