குழந்தைகளுக்கான பொங்கலை சிறுவீட்டுப் பொங்கல் என்றும் சொல்வர். தை மாதத்தில் வரும் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இந்த பொங்கலை வைக்கலாம். அன்று அதிகாலையில் வாசலில் சாணப்பிள்ளையார் பிடிப்பது போல, சாணத்தை உருட்டி வைத்து அதில் பூவரசு, பூசணி, செம்பருத்திப் பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். மணலால் சிறுவீடு போல ஓவியம் வரைந்து, அதன் நடுவே பொங்கல் பானை வைத்து பொங்கலிட வேண்டும். ஒரு முறத்தின்(சுளவு) பின்பக்கம் சிறு சிறு வாழை இலையை விரித்து அதில் சிறிதளவு பொங்கல், பழம் வைத்து அதன் மீது கற்பூரம் ஏற்றி நீர்நிலையில் மிதக்க விட வேண்டும். கங்காதேவிக்கு பூஜை செய்வதுடன், தண்ணீரில் வாழும் மீன் முதலான உயிர்களுக்கு தானம் செய்த புண்ணியமும் நமக்கு கிடைக்கும். அன்று மதியம் குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும். அவர்கள் சேஷ்டை செய்தாலும், அன்புடன் கண்டிக்க வேண்டும்.