சபரிமலை: சபரிமலையில் மகரஜோதி மற்றும் மகரவிளக்கை கண்டு பக்தர்கள் பரசவத்துடன் தரிசனம் செய்து மலை இறங்கினர்.
சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த டிச.,30-ம் தேதி தொடங்கிய மகரவிளக்கு கால பூஜையின் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று (ஜன.,14ல்) மகரவிளக்கு பெருவிழாவும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் சரணகோஷம் முழங்க 18-ம் படி வழியாக ஒரு திருவாபரண பெட்டி வந்தது. இரண்டு பெட்டகங்கள் மாளிகைப்புறம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீகோயில் முன்பு திருவாபரணபெட்டியை தந்திரியும், மேல்சாந்தியும் பெற்று நடை அடைத்தனர். தொடர்ந்து திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு நடை திறந்து தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சன்னிதானத்தில் குழுமியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் கண்கள் பொன்னம்பலமேட்டை நோக்கியிருந்தது.
தீபாராதனை முடிந்த 6.38 மணியக்கு மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசிக்க தொடங்கியது. இதை கண்ட பக்தர்கள் சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டனர். பின்னர் மூன்று முறை மகரஜோதி காட்சி தந்தது. ஜோதியை கண்டு தரிசித்த ஆனந்தத்தில் பக்தர்கள் மலை இறங்கினர். சபரிமலை மகரஜோதி தரிசனம் தினமலர் இணையதளத்தில் www.dinamalar,comல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.