பதிவு செய்த நாள்
22
ஜன
2019
01:01
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் முருகன் கோயில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. ராமநாதபுரம் குண்டுக் கரை சாமிநாதசுவாமி கோயிலில் காலை சுவாமிக்கு பால், பன்னீர், திருநீறு, உள்ளிட்ட 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பின் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் கந்த சஷ்டி பாராயணமும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், ராமநாதபுரம் சொக்கநாதர் கோவில், வழிவிடு முருகன் கோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது.
பொன்குளம்: ஸ்ரீவிக்னேஸ்வர பாலாசுப்பிரமணிய சுவாமி கோயில் அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட கோயிலில் 57 வது ஆண்டு தைப்பூச விழா நடந்தது. காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது.
*ரெகுநாதபுரம் அருகே சங்கந்தியான் வலசையில் உள்ள மயில்வாகனப் பெருமான், பாம்பன் சுவாமிகள் கோயிலில் தைபூச விழா கோலாகலமாக நடந்தது. மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
*செம்பாதி குண்டு தர்ம முனீஸ்வரர் கோயில் இருந்து அலகு குத்தி வேல் காவடி, மயில் காவடி, பால்குடம், நட்சத்திரம், பறவைக்காவடி எடுத்து முருக பக்தர்கள் ஊர்வலமாக கோயில் வரை நேர்த்திக்கடன் பூஜைகளை நிறைவேற்றினர். அன்னதானம் நடந்தது. பெண்கள் பொங்கலிட்டனர். ஏற்பாடுகளை கிராமத்தலைவர் ஆறுமுகம் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
*தை பூசத்தை முன்னிட்டு திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் சன்னதி, நம்புதாளை, ஆந்தகுடி முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல அபிஷேகங்கள் நடந்தது.
* நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் தைப்பூச விழாவையொட்டி நாகநாதசுவாமி, சவுந்தர்யநாயகி அம்மன் தனித்தனியாக ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பஞ்சமூர்த்திகளுடன் மஞ்சக்கொல்லை கிராமத்திற்கு புறப்பாடாகினர். அங்கு தைப்பூச விழாவையொட்டி வைகை ஆற்றுக்குள் தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. சுற்றுவட்டார கிராம மக்கள் தங்கள் நிலங்களில் விளைந்த தானியங்கள், காய்கறிகளை சுவாமி மீது வீசி படைத்தனர். இதனால் தங்கள் நிலங்களில் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தொடர்ந்து சுவாமி, அம்பாள் புறப்பாடாகி இரவு கோயிலை அடைந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.