பதிவு செய்த நாள்
24
ஜன
2019
12:01
வீரபாண்டி: காளிப்பட்டி கந்தசாமி கோவிலுக்கு, 10 கி.மீ., தூரம், அடிப்பிரதட்சணமாக, பெண் ஒருவர் சென்று, வேண்டுதலை நிறைவேற்றினார். பழநிக்கு அடுத்து, சேலம் அருகேவுள்ள, காளிப்பட்டி கந்தசாமி கோவிலுக்கு, தினமும் பலர், பாதயாத்திரையாக வந்து, முருகனை தரிசித்து செல்கின்றனர். நேற்று மதியம், ஆட்டையாம்பட்டி வழியாக, ஒரு பெண், கந்தசாமி கோவிலுக்கு, அடி மேல் அடி வைத்து, அடிப்பிரதட்சணமாக, கடும் வெயிலில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவரிடம், இதுகுறித்து கேட்டபோது, மவுன விரதம் இருப்பதால், பேச முடியாது என, சைகை மூலம் தெரிவித்தார். தொடர்ந்து வற்புறுத்தி கேட்டபோது, பேனாவால் எழுதிக்காட்டினார். அதில், என் பெயர் சாந்தி, 38, அடிப்பிரதட்சணமாக நடந்து வருவதாக வேண்டிக்கொண்டேன். அதன்படி, மின்னக்கல்லில், காலை, 6:00 மணிக்கு அடிப்பிரதட்சணத்தை தொடங்கினேன். 10 கி.மீ., தூரமுள்ள கோவிலுக்கு சென்று கொண்டிருக்கிறேன். வேண்டுதலை, வெளியில் கூற முடியாது என, எழுதப்பட்டிருந்தது. வழக்கமாக அடிப்பிரதட்சணம் செய்வோர், கோவில் உள் பிரகாரத்தை மட்டும், 3, 5, 9 அல்லது 108 முறை வலம் வருவதாக வேண்டுவர். ஆனால், 10 கி.மீ., தூரம் வெயிலில் எங்கும் நிற்காமல், தனியாக நடந்து சென்ற பக்தையை, மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.