பதிவு செய்த நாள்
24
ஜன
2019
02:01
குன்றத்தூர்: குன்றத்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலை சுற்றி, குப்பை, பிளாஸ்டிக் தேங்கி, பராமரிப்பு படுமோசமாக உள்ளது. இது, பக்தர்கள் மத்தியில் அதருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
கோவில்கள் சூழ்ந்த நகரமான குன்றத்தூரில், மலையின் மேற்பகுதியில் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் அடிவாரத்தில், 16 கால் மண்டபமும், மலைக்கு செல்ல, 84 படிக்கெட்டுகளும் உள்ளன. பின் அடிவாரத்தில், சரவணப் பொய்கை உள்ளது.
இரண்டாம் குலோத்துங்க மன்னர் காலத்தில், இக்கோவில் நிறுவப்பட்டதாக, வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், 800 ஆண்டுகளுக்கு முன்பே, இத்தலம் சிறப்புடன்
விளங்கியதாகவும் கூறப்படுகிறது.
இவ்வளவு சிறப்பு மிக்க, இக்கோவிலுக்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, தினமும், ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். சமீபகாலமாக, இக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளின் பராமரிப்பு, படுமோசமாக உள்ளது.
நுழைவாயிலில் எங்கு பார்த்தாலும், பிளாஸ்டிக் மையமாகவே உள்ளது. பக்தர்கள் சாப்பிடும் இலை, உணவு பொருட்கள், குப்பை ஆகியவற்றை, கோவிலை சுற்றி, குவியல் குவியலாக கொட்டியுள்ளனர்.இதை சாப்பிடுவதற்காகவே, கால்நடைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. மற்றொருபுறம், சுற்றியுள்ள மக்கள், கோவிலின் பின்புறத்தை கழிப்பிடமாக பயன்படுத்தி வருவது, வேதனை அளிக்கிறது. மலையை சுற்றி, சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
எனவே, சுப்ரமணிய சுவாமி கோவிலை சுற்றியுள்ள குப்பை, பிளாஸ்டிக் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்றி, கோவிலை முறையாக பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.