பழநி : பழநி மலைக்கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சில போலீசார் பூட்ஸ் அணிந்தவாறு சென்றதற்கு இந்துஅமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தைப்பூசவிழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் திண்டுக்கல் மட்டுமின்றி தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிலர் மலைக்கோயிலில் பூட்ஸ் அணிந்து பணிபுரிந்தனர். இதுதொடர்பாக வாட்ஸ் ஆப்ல் போட்டோ வைரலாகியுள்ளது.
இதற்கு பா.ஜ., விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் தனியார் செக்யூரிட்டிகள் உதவியுடன் பக்தர்கள் போர்வையில் மலையேறி படிப்பாதை, யானைப்பாதையை ஆக்கிரமித்து தரைக் கடைகள் வைக்கின்றனர். இதனால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
பக்தர்கள் நலனுக்காக படிப்பாதை, யானைப்பாதையில் ஆக்கிரமிப்பு கடைகள் குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.