திருமூர்த்திமலையில் பக்தர்கள் வௌ்ளம்
பதிவு செய்த நாள்
05
பிப் 2019 12:02
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்களும், மாட்டு வண்டிகளில் விவசாயிகளும் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
இங்கு, ஆடி, தை அமாவாசை நாட்களில், பல்வேறு பகுதிகளிலிருந்தும், மாட்டு வண்டிகளில் விவசாயிகள் வருகின்றனர். தைப்பட்டம், ஆடிப்பட்டம் சாகுபடி விதைப்பதற்கு முன்பு, விதைகளை கொண்டு வந்து, மகசூல் பெருக வழிபட்டு செல்வதையும், இளங்காளைகளை உழவு, வண்டிகளுக்கு பழக்கப்படுத்தி, அவற்றை கோவிலுக்கு அழைத்து வந்து வணங்குவதையும் பாரம்பரிய வழக்கமாக கொண்டுள்ளனர்.மேலும், பாலாற்றின் கரையில் மும்மூர்த்திகளும் எழுந்தருளியுள்ளதால், முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் வருகின்றனர். நேற்று, தை அமாவாசை என்பதால், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், நேற்றுமுன்தினம் மாலை முதலே ஏராளமான விவசாயிகள், மாட்டு வண்டிகளில் கோவிலுக்கு வந்தனர்.
அணை பகுதியில், நுாற்றுக்கணக்கான வண்டிகள் காணப்பட்டன.தை அமாவாசையை முன்னிட்டு, அமணலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை, சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.பாலாற்றின் கரையில், நுாற்றுக்கணக்கானவர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, வழிபட்டனர்.
|