பதற்றமுடன் வந்தார் விவசாயி ஒருவர் காஞ்சிப்பெரியவரிடம். பக்தர்களிடம் பேசிக் கொண்டிருந்த சுவாமிகள் அவரைக் கவனித்தவுடன், “ஏன் பதற்றமாக இருக்கிறாய்?” எனக் கேட்டார். “சாமி! என் ஒரே மகனைப் பாம்பு கடித்து விட்டது. அது அவனது உடம்பின் மீது ஊர்ந்ததை பார்த்தேன். பயத்தில் அவன் நடுங்குகிறான். நீங்க தான் காப்பாத்தணும்” என வணங்கினார் விவசாயி. கண்களை மூடிய பெரியவர் அவரிடம், “அவன் மீது பாம்பு ஊர்ந்ததைத் தானே பார்த்தாய்? கடித்ததைப் பார்க்கவில்லையே?” “ஊர்ந்து போனது கடிக்காம இருக்குமா சாமி? அது கடிச்சிருச்சுன்னு என் மகன் அழறான்...” என்றார். “சரி. பாம்பு கடிச்சுதா; வெறுமனே ஊர்ந்து போச்சான்னு தெரிஞ்சுக்க வழியிருக்கு. முதல்ல மகன் நெத்தியில திருநீறைப் பூசு. பயப்படாதேன்னு தைரியம் சொல்லு. வீட்டுல எண்ணெய் தேச்சுக் குளிக்கப் பயன்படுத்துற சீயக்காய்ப்பொடி இருக்கா?” எனக் கேட்டார்.
“ நிறைய இருக்கு சாமி” “உன் மகனுக்கு கொஞ்சம் சீயக்காய்ப்பொடியைக் கொடு” “அது கசக்குமே?” “ஆமாம். சீயக்காய் கசக்கிறதென்று சொல்லி அவன் துப்பினால் பாம்பு கடிக்கவில்லை என்று அர்த்தம். ஒருவேளை சீயக்காய் இனிக்கிறது; இன்னும் கொஞ்சம் கொடுன்னு கேட்டால் பாம்பு கடித்து விட்டது என்பது உறுதி. அப்புறமா வைத்தியம் பார்க்கவோ, மந்திரிக்கவோ ஏற்பாடு செய்யலாம். உடனே நான் சொன்னதைச் செய்து விட்டு வா!” என்றார். வீட்டுக்குப் போன விவசாயி, சற்று நேரத்தில் மகிழ்ச்சியுடன் பெரியவரை சந்திக்க வந்தார். சீயக்காய் கசப்பதாகச் சொன்னதாகவும், இப்போது அவனது பயம் தெளிந்ததாகவும் சொன்ன விவசாயி நன்றியுடன் கண்ணீர் பெருக்கினார். நாடு முழுவதும் யாத்திரை சென்ற மகாசுவாமிகள் ஆன்மிகத் தேடல் மட்டுமின்றி வாழ்வின் பல பிரச்னைகளுக்கும் தீர்வு காட்டுபவராக திகழ்ந்தார்.