வீட்டில் இருக்கும் பொன்னையும், பொருளையும் பிறருக்கு கொடுத்து உதவினால் தான் நபிகள் நாயகம் மகிழ்ச்சியாக இருப்பார். பொருள் கேட்டு யாரும் வராவிட்டால் அவரே தேடிச்சென்று கொடுப்பார். மலிவான பார்லிமாவு, பேரீச்சம்பழம் ஆகியவற்றில் கூட தேவையானதை எடுத்துக் கொண்டு, மற்றதை பிறருக்கு வழங்கிவிடுவார். தங்களுக்காக சேமித்திருக்கும் உணவுக்குவியலைக் கூட கொடுக்கத் தயங்கியதில்லை. நாயகத்தின் சால்வை அழகாக இருக்கிறது என்றார் ஒரு மனிதர். உடனே அந்த சால்வையை கொடுத்து விட்டார். அங்கிருந்தவர்கள், “இது நாயகத்திற்கு மிக அவசியமானதாக இருந்தது என்பதை அறிவீரா? மேலும் யார் எது கேட்டாலும், அதைக் கொடுக்க மறுப்பதில்லை என்பதும் உமக்கு தெரியுமல்லவா?” என்று சால்வை பெற்றவரிடம் கடிந்தனர். “அவர் கையால் பெற்ற இந்த சால்வையில் அருள் உள்ளது. நான் இறந்ததும், என் சடலத்தை சுற்றவே இதை பெற்றுக்கொண்டேன்” என உருக்கமாகக் கூறினார் அவர். அரபுநாட்டில் தோட்டங்கள் மதிப்பு மிக்க சொத்துக்களாக கருதப்பட்டன. மகைரிக் என்பவர் நாயகத்திற்கு ஏழு தோட்டங்களை அன்பளிப்பாகக் கொடுத்தார். அவற்றை தர்மச்சொத்துக்களாக்கி (வக்பு), அதில் வரும் வருமானத்தை ஏழைகளுக்கு வழங்கச் செய்தார் நாயகம். ஒருமுறை தோழர் ஒருவர் திருமணம் செய்த போது, நண்பர்களுக்கு விருந்தளிக்க அவரிடம் வசதியில்லை. நாயகம் தன் வீட்டில் இருந்த ஒரே ஒரு மாவு மூடையை நண்பருக்கு கொடுத்து மகிழ்ந்தார்.