முருகப்பெருமானின்
திருப்பெயர்களில் ஒன்று காங்கேயன். கங்கையின் மைந்தன் எனும் பொருளில்
அமைந்தது. இதற்கு வேறொரு காரணமும் உண்டு. சூரபதுமனின் மைந்தர்களில் ஒருவன்
இரண்யன் (திருமால் அழித்த இரண்யாட்சன், இரண்யகசிபு ஆகியோர் வேறு.)
கடலுக்கடியில் வசித்த இந்த அசுரனிடமிருந்து தேவர்களைக் காக்க திருவுளம்
கொண்ட முருகப்பெருமான், நெடிய வில்லையும் அம்பையும் ஏந்தியபடி போர்க்கோலம்
கொண்டு கடற்கரையை அடைந்தார். அங்கே நீர்ப்பரப்பில் மகர மீனாக மேலெழுந்து
வந்தான் அசுரன். அக்கணமே, முருகப்பெருமான் எய்த அஸ்திரம் அவனது ஆணவத்தை
அழித்தது. மகர வடிவுடன் வந்து முருகனின் தாள்களைப் பணிந்தான்.
அவனை
வாகனமாக ஏற்றுக்கொண்டார் முருகப்பெருமான். மகர வாகனத்தில் பவனி வரும்
முருகனை காங்கேயன் எனப்போற்றுவர். இந்தத் திருவடிவில் நீலோற்பவம்,
தீயகலாகிய பந்தம், பூரணக்கும்பம் ஏந்தியவராகத் திகழ்கிறார் முருகன். கங்கு
என்றால் சிறிய ஜ்வாலையுடன் கனன்றுகொண்டிருக்கும் நெருப்பு. உலகையே
அழிக்கவல்ல வடவைக் கனலாகவும் திகழும். இந்தக் கங்கினை எளிய தீப்பந்தமாக்கி
ஏந்தியிருப்பதால் முருகனுக்குக் காங்கேயன் எனப்பெயர். இவரை வழிபட்டால்
வறுமைப்பிணி நீங்கும்; செல்வம் செழிக்கும் என்கின்றன ஞானநூல்கள்.