துளசிதாசர் ராமகாவியம் எழுதினார். தினமும் அதை தன் சீடர்களுக்கும் படித்து விளக்கம் கூறுவார். அப்போது யாருக்கும் தெரியாமல் ஆஞ்சநேயரும் அங்கு வந்து ராமகாவியத்தைக் கேட்டு மகிழ்ந்தார். ஒருநாள் துளசிதாசர், ""அனுமன், சீதையைத் தேடிக்கொண்டு, அசோக வனத்துக்குச் சென்றார். அப்போது, அவர் கண்களில் அங்குள்ள வெள்ளை மலர்கள் தென்பட்டன! என்று கூறினார். அப்போது அனுமன், ""தவறு, நான் அசோக வனத்தில் கண்டது, சிவப்பு நிற மலர்கள் என்றார். குரல் கேட்ட திசை நோக்கி துளசிதாசர் திரும்பிப் பார்த்தார். அங்கு அனுமன் நின்று கொண்டிருந்தார். ""நான் அங்கு பார்த்தது சிவப்பு நிறப் பூக்கள். நீங்கள் வெள்ளை நிறப் பூக்கள் என்று சொல்கிறீர்களே, இது தவறு! என்று அனுமன் மீண்டும் கூறவே, துளசிதாசர் இந்த விவகாரத்தை ராமரிடம் எடுத்துச் சென்றார். ""அனுமா, துளசிதாசர் சொல்வதும் உண்மை. நீ சொல்வதும் உண்மை. நீ கோபத்தில் இருந்ததால், உன் கண்கள் சிவந்திருந்தன. அதனால், வெள்ளை நிறப் பூக்கள் சிவப்பாகக் காட்சி தந்தன என்று ராமபிரான் விளக்கினார். "நாம் எந்த நோக்கில் பார்க்கிறோமோ, அதுவே காட்சியில் நமக்குத் தோன்றும் என்பது இதன் கருத்து என்பர்.