பதிவு செய்த நாள்
12
பிப்
2019
05:02
மேட்டுப்பாளையம்:காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழாவில் பக்தர்கள் வசதிக்காக, 24 மணி நேரமும் குடிநீர் சப்ளை செய்வதோடு, துப்புரவு பணிகள் சிப்ட் முறையில்
நடைபெறும் என, செயல் அலுவலர் பார்த்திபன் தெரிவித்தார்.
காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசிமகத் தேரோட்டம் மிகவும் சிறப்பாக கொண்டாடப் படும். இந்தாண்டு தேரோட்டம், நாளை கிராம சாந்தி, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
வரும், 17ம் தேதி பெட்டத்தம்மன் அழைப்பும், 18ம் தேதி திருக்கல்யாணமும், 19ம் தேதி மதியம், 2:45 மணிக்கு தேரோட்டமும், அதைத் தொடர்ந்து தண்ணீர் சேவை, பந்த சேவை
ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.தேரோட்டம், பந்தசேவை, தண்ணீர் சேவை நடைபெறும் நாட்களில் கோவை, ஈரோடு, திருப்பூர், வடகேரளா, நீலகிரி ஆகிய ஊர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வர்.
பக்தர்களின் வசதிக்காக காரமடை பேரூராட்சி நிர்வாகம் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து வருகிறது.பேரூராட்சி செயல் அலுவலர் பார்த்திபன் கூறியதாவது:தேர்த்திருவிழாவை
முன்னிட்டு, நகரில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். பத்து இடங்களில் குடிநீர் தொட்டிகளும், மொபைல் கழிப்பிடங்களும் வைக்கப்படும். தண்ணீர் பந்தல்களில், விழா நடைபெறும் இரண்டு நாட்களுக்கும், 24 மணிநேரமும் தண்ணீர் கொடுக்கப்படும்.காரமடை, அன்னூர், கூடலூர், வீரபாண்டி, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பேரூராட்சியில் உள்ள துப்புரவு பணியாளர்களை கொண்டு, இரவுபகலாக சிப்ட் அடிப்படையில் தேர் செல்லும் வீதிகள் உள்பட நகர் முழுவதும் தொடர்ந்து துப்புரவுபணிகள் நடைபெறும்.இந்தாண்டு பக்தர்கள் வசதிக்காக கோவில் முன்பு எந்தக் கடைகளும் ஏலம் விடவில்லை.இவ்வாறு
செயல்அலுவலர் கூறினார்.